Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தீர்ப்பாரை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

நான்காம் பத்து

தீர்ப்பாரை

பராங்குச நாயகியின் மனநோயை அறிந்து, அவளது நோயைத் தீர்க்கும் வழி முறைகளைக் கூறி, 'வேறு பரிஹாரங்கள் அவளது நோயைத் தீர்க்கமாட்டா' என்று தோழி கூறுதல் போல் இப்பகுதி அமைந்துள்ளது.

வேலனைக்கொண்டு வெறியாட்டு

அயர்தலைத் தடுத்தல் -வெறி விலக்கு

கலி நிலைத்துறை

கண்ணனையே எண்ணுகிறாள் தலைவி

3062. தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம்

நாடுதும் அன்னைமிர்,

ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன்

னோயிது தேறினோம்,

போர்ப்பாகு தான்செய்தன் றைவரை

வெல்வித்த, மாயப்போர்த்

தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை

துழாய்த்திசைக் கின்றதே.

சங்குச்சக்கரம் என்றுரைத்தால் தலைவியின் நோய் தீரும்

3063. திசைக்கின்ற தேயிவள் நோயிது

மிக்க பெருந்தெய்வம்,

இசைப்பின்றி நீரணங் காடும்

இளந்தெய்வம் அன்றிது,

திசைப்பின்றி யேசங்கு சக்கா

மென்றிவள் கேட்க,நீர்

இசைக்கிற்றி ராகில்நன் றேயில்

பெறுமிது காண்மினே.

கட்டுவிச்சி சொல் கேளாதீர் : கண்ணன் கழல் வாழ்த்துக

3064. இதுகாண்மின் அன்னைமீர்!இக்கட்டு

விச்சிசொற் கொண்டு,நீர்

எதுவானும் செய்தங்கோர் கள்ளும்

இறைச்சியும் தூவேல்மின்,

மதுவார் துழாய்முடி மாயப்

பிரான்கழல் வாழ்த்தினால்,

அதுவே யிவளுற்ற நோய்க்கும்

அருமருந் தாகுமே.

நாராயணனின் திருநாமங்களைச் சொல்லுக : இவள் பிழைப்பாள்

3065. மருந்தாகும் என்றங்கோர் மாய

வலவைசொற் கொண்டு,நீர்

கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்

களனிழைத் தென்பயன்?

ஒருங்காக வேயுல கேழும்

விழுங்கி உமிழ்ந்திட்ட,

பெருந்தேவன் பேர்சொல்ல கிற்கில்

இவளைப் பெறுதிரே.

வெறியாடல் வேண்டாம் ஸ்ரீ சூர்ணக் குறியிடுக

3066. இவளைப் பெறும்பரி சிவ்வணங்

காடுதல் அன்றந்தோ,

குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்

வாயும் பயந்தனள்,

கவளக் கடாக்களி றட்டபி

ரான்திரு நாமத்தால்,

தவளப் பொடிக்கொண்டு நீரிட்

டிடுமின் தணியுமே.

பக்தர்களின் பாததூளியே இவள் நோயைத் தீர்க்கும்

3067. தணியும் பொழுதில்லை நீரணங்

காடுதிர் அன்னைமீர்,

பிணியும் ஒழிகின்ற தில்லை

பெருகு மிதுவல்லால்,

மணியின் அணிநிற மாயன்

தமரடி நீறுகொண்டு,

அணிய முயலின்மற் றில்லைகண்

டீரிவ் வணங்குக்கே.

வெறியாட்டு வேண்டாம் : பக்தர்களை வணங்குங்கள்

3068. அணங்குக் கருமருந் தென்றங்கோர்

ஆடும்கள் ளும்பராய்,

துணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்

கப்படும் அன்னைமீர்,

உணங்கல் கெடக்கழு தையுத

டாட்டம்கண் டென்பயன்?

வணங்கீர்கள் மாயப் பிரான்தமர்

வேதம்வல் லாரையே.

வெறியாட்டு கீழ்மையானது; மாலடி பணிக

3069. வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்

ணோர்பெரு மான்திருப்

பாதம் பணிந்து,இவள் நோயிது

தீர்த்துக்கொள் ளாதுபோய்

ஏதம் பறைந்தல்ல செய்துகள்

ளூடு கலாய்த்தூய்,

கீத முழவிட்டு நீர்அணங்

காடுதல் கீழ்மையே.

கண்ணன் கழலிணையே நோய்களுக்கு மருந்து

3070. கீழ்மையி லங்கோர் கீழ்மக

னிட்ட முழவின்கீழ்,

நாழ்மை பலசொல்லி நீரணங்

காடும்பொய் காண்கிலேன்,

ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந்

நோய்க்குமீ தேமருந்து,

ஊழ்மையில் கண்ணபி ரான்கழல்

வாழ்த்துமின் உன்னித்தே.

கண்ணனை ஏத்துமின் : தலைவி பிழைப்பாள்

3071. உன்னித்து மற்றொரு தெய்வம்

தொழாளவ னையல்லால்,

நம்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்

கப்படும் அன்னைமீர்,

மன்னப் படும்மறை வாணனை

வண்துவ ராபதி

மன்னனை, ஏத்துமின் ஏத்துத

லும்தொழு தாடுமே.

இவற்றைப் பாடுக : உங்கள் துக்கங்கள் நீங்கும்

3072. தொழுதாடித் தூமணி வண்ணனுக்

காட்செய்து நோய்தீர்ந்த

வழுவாத தொல்புகழ் வண்குரு

கூர்ச்சட கோபன்,சொல்

வழுவாத ஆயிரத் துள்ளிவை

பத்து வெளிகளும்,

தொழுதாடிப் பாடவல் லார்துக்க

சீலம் இலர்களே.

நேரிசை வெண்பா

ஸஹஸ்ரநாமம் கேட்டு அறிவு பெற்றான் மாறன்

தீர்ப்பா ரிலாதமயல் தீரக் கலந்தமால்,

ஓர்ப்பாது மின்றி யுடன்பிரிய, - நேர்க்க

அறிவழிந்துற் றாரும் அறக்கலங்க, பேர்கேட்

டறிவுபெற்றான் மாறன்சீ லம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is வீற்றீருந்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  சீலம் இல்லா
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it