Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கோவை வாயாள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

நான்காம் பத்து

கோவை வாயாள்

பராங்குச நாயகி ஆசைப்பட்டபடியே பகவான் அவரோடு வந்து கலந்து தன் பேரன்பை வெளியிட்டான். ஆழ்வார் அவனது பிரணயித்வ குணத்தை இப்பகுதியில் புலப்படுத்துகிறார்.

நாராயணன் சேர்க்கையால் அடைந்த இன்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என் மனமே!கண்ணனுக்குப் பூசும் சந்தனம்

3029. கோவை வாயாள் பொருட்டேற்றின்

எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்

கோவை வீயச் சிலைகுனித்தாய்!

குலநல் யானை மருப்பொசித்தாய்,

பூவை வீயா நீர்தூவிப்

போதால் வணங்கே னேலும்,நின்

பூவை வீயாம் மேனிக்குப்

பூசும் சாந்தென் னெஞ்சமே.

ஏக மூர்த்திக்கு ஆடையும் அணிகலனும் என் பாடல்களே

3030. பூசும் சாந்தென் னெஞ்சமே

புனையும் கண்ணி எனதுடைய,

வாச கம்செய் மாலையே

வான்பட் டாடை யுமஃதே,

தேச மான அணிகலனும்

என்கை கூப்புச் செய்கையே,

ஈசன் ஞால முண்டுமிழ்ந்த

எந்தை யேக மூர்த்திக்கே.

நாராயணா!நின்னை நினைத்தேன் ; துன்பம் துடைத்தேன்

3031. ஏக மூர்த்தி இருமூர்த்தி

மூன்று மூர்த்தி பலமூர்த்தி

ஆகி, ஐந்து பூதமாய்

இரண்டு சுடராய் அருவாகி,

நாகம் ஏறி நடுக்கடலுள்

துயின்ற நாரா யணணே,உன்

ஆகம் முற்றும் அகத்தடக்கி

ஆவி யல்லல் மாய்த்ததே.

எனதுயிரே கண்ணனுக்குத் தலைமாலை

3032. மாய்த்தல் எண்ணி வாய்முலை

தந்த மாயப் பேயுயிர்

மாய்த்த, ஆய மாயனே!

வாம னனே மாதவா,

பூத்தண் மாலை கொண்டுன்னைப்

போதால் வணங்கே னேலும்,நின்

பூத்தண் மாலை நெடுமுடிக்குப்

புனையும் கண்ணி எனதுயிரே.

என் காதலே கண்ணனுக்கு அணிகலன்கள்

3033. கண்ணி யெனதுயிர் காதல்

கனகச் சோதி முடிமுதலா,

எண்ணில் பல்க லன்களும்

நண்ணி மூவு லகும்ந

விற்றும் கீர்த்தி யுமஃதே,

கண்ண னெம்பி ரானெம்மான்

கால சக்கரத் தானுக்கே.

நாராயணா!உன் திருவடிகளே என்னுடைய அணிகள்

3034. 'கால சக்க ரத்தோடு

வெண்சங் கம்கை யேந்தினாய்,

ஞால முற்று முண்டுமிழ்ந்த

நாரா யணனே!' என்றென்று,

ஓல மிட்டு நானழைத்தால்

ஒன்றும் வாரா யாகிலும்,

கோல மாமென் சென்னிக்குன்

கமலம் அன்ன குரைகழலே.

மாயனே!நின்னுருவம் என் உயிர்மேல் உள்ளது

3035. குரைக ழல்கள் நீட்டிமண்

கொண்ட கோல வாமனா,

குரைக ழல்கை கூப்புவார்கள்

கூட நின்ற மாயனே,

விரைகொள் பூவும் நீரும்கொண்

டேத்த மாட்டே னேலும்,உன்

உரைகொள் சோதித் திருவுருவம்

என்ன தாவி மேலதே.

கண்ணா!நான் உன்னை என்னவென்று உரைக்க வல்லேன்!

3036. என்ன தாவி மேலையாய்

ஏர்கொள் ஏழு லகமும்,

துன்னி முற்று மாகிநின்ற

சோதி ஞான மூர்த்தியாய்,

உன்ன தென்ன தாவியும்,

இன்ன வண்ண மேநின்றாய்

இன்ன வண்ண மேநின்றாய்

என்று ரைக்க வல்லேனே?

மேன்மக்களுடன் நானும் துதித்தேன்

3037. உரைக்க வல்லேன் அல்லேனுள்

உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்

கரைக்கண் என்று செல்வன்நான்?

காதல் மையல் ஏறினேன்,

புரைப்பி லாத பரம்பரனே!

பொய்யி லாத பரஞ்சுடரே,

இரைத்து நல்ல மேன்மக்கள்

ஏத்த யானும் ஏத்தினேன்.

யான் உய்ய எம்பெருமானையே ஏத்தினேன்

3038. யானும் ஏத்தி ஏழுலகும்

முற்றும் ஏத்தி, பின்னையும்

தானும் ஏத்தி லும்தன்னை

ஏத்த ஏத்த எங்கெய்தும்,

தேனும் பாலும் கன்னலும்

அமுது மாகித் தித்திப்ப,

யானு மெம்பி ரானையே

ஏத்தி னேன்யா னுய்வானே.

இவற்றைப் படியுங்கள் : விண்ணையும் ஆளலாம்

3039. உய்வு பாயம் மற்றின்மை

தேறிக் கண்ணன் ஒண்கழல்மேல்

செய்ய தாம ரைப்பழனத்

தென்னன் குருகூர்ச் சடகோபன்

பொய்யில் பாடல் ஆயிரத்துள்

இவையும் பத்தும் வல்லார்கள்,

வையம் மன்னி வீற்றிருந்து

விண்ணும் ஆள்வர் மண்ணூடே.

நேரிசை வெண்பா

மாறனின் அருளால் இவ்வுலகு வாழ்கின்றது

கோவான ஈசன் குறைவெல்லாந் தீரவே,

ஓவாத காலத் துவாதிதனை, - மேவிக்

கழித்தடையக் காட்டிக் கலந்தகுண மாறன்,

வழுத்துதலால் வாழ்ந்ததிந்த மண்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பாலனாய்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மண்ணை
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it