திருக்குறுங்குடி (வாமன க்ஷேத்ரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்

திருக்குறுங்குடி (வாமன க்ஷேத்ரம்)

திருநெல்வேலியிலிருந்து 18 மைல் நாங்குனேரிக்கு பஸ்ஸில் வந்து அங்கிருந்து வேறு பஸ்ஸில் 8 மைல் கடந்து இங்கு வரலாம். அல்லது நாங்குனேரியிலிருந்து களக்காடு போய், மறுபடி பஸ்மாரி திருக்குறுங்குடி வந்தால், விரைவில் வரலாம். இவ்வூரில் ராமாநுஜ கூடங்களும் மடங்களும் உள்ளன. தண்ணீர்ப்பந்தல், ஹோட்டல் உள்ளன. வசதிகள் மிகக்குறைவு. அர்ச்சகரிடமே சொல்லி வைத்தால் பிரஸாதம் விலைக்குக் கொடுப்பார்.

மூலவர் - நின்றநம்பி (குறுங்குடி நம்பி, இருந்த நம்பி, வருக நம்பி, வைஷ்ணவ நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என்ற பெயர்களுண்டு) , நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - குறுங்குடிவல்லி நாச்சியார் (இரு தனிக்கோவில் நாச்சியார்கள் உண்டு) .

தீர்த்தம் - திருப்பாற்கடல், பஞ்சதுறை, சிந்துநதி.

விமானம் - பஞ்சகேதக விமானம்.

ப்ரத்யக்ஷம் - சிவன்.

விசேஷங்கள் - இது திருமங்கையாழ்வார் பரமபதித்த ஸ்தலம். தனிக் கோயில் நாச்சியார்களின் உத்ஸவர்கள் பெருமாளுடன் ஏகாஸனத்தில் இருப்பதால் தாயார் ஸந்நிதிகளில் அர்ச்சனை கிடையாது. நின்ற நம்பி, கிடந்த நம்பி இவர்களுடைய ஸந்நிதிகளக்கு நடுவில் சிவன் ஸந்நிதியும் பைரவர் ஸந்நிதியும் உள்ளன. பெருமாள் மடைப்பள்ளி பிரஸாதங்களே சிவனுக்கும் நிவேதனம் செய்யப்படுகின்றன. "இருந்த நம்பி" ஸந்நிதியிலுள்ள பெருமாளை வைகுந்த நாதன் என்கிறார்கள். ஸ்ரீ மணவாளமாமுனிக்கு ஸந்நிதி இருக்கிறது. இக்கோவிலிலிருந்து சுமார் 3 ஃபர்லாங் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடையின் கரையில், திருப்பாற்கடல் நம்பி ஸந்நிதி உள்ளது. இவ்வூரிலிருந்து சுமார் 6 1/2 மைல் தூரத்தில் உள்ள குன்றின்மேல் மலைமேல் நம்பி ஸந்நிதி உள்ளது. ஊருக்குக் கிழக்கே, ஆற்றின் அருகில் வயல்வெளிகளில் "திருமங்கையாழ்வார் திருவரசு" என்ற சிறிய கோவில் இருக்கிறது. ஊரிலிருந்து சுமார் முக்கால் மைல் தூரத்தில் திருப்பாற்கடல் ஆற்றின் நடுவில் திருப்பரிவட்டப்பாறை என்ற பாறை மேல் உடையவர் ஸந்நிதியிருக்கிறது. விரோதிகள் உடையவரைக் கொன்றுவிட ஏற்பாடு செய்தபோது வடுக நம்பி என்ற பெயருடன் பெருமாள், இவரை இந்தப்பாறை மீது கிடத்திக் காப்பாற்றினாராம். பெருமாள் உடையவருக்கு ஸிம்ஹாஸனமிட்டு, தான் அருகில் சீடனாக நின்று திருமந்திரார்த்த உபதேசம் பெற்றதால் 'வைஷ்ணவ நம்பி' என்றழைக்கப்படுகிறார். கைசிக த்வாதசியன்று நம்பாடுவான் என்ற பக்தர் இத்தலத்தில் தன் புண்ணியத்தில் ஒரு பாகத்தை தன்னை பக்ஷிக்க வந்த ப்ரம்மராக்ஷஸனுக்குக் கொடுத்து இத்தலத்தை ரக்ஷித்தான் என்று வராஹபுராண வரலாறு. இன்றும், இந்த ஐதீஹம் நாளைக்கும் நாடக ரூபமாக இங்கே கைசிக ஏகாதசியன்று ராத்திரி நடக்கிறது. யமபட்டணம் இந்த தலத்திலிருந்து கூப்பிட்டதூரத்தில் இருப்பதாக ஐதீஹம்.

இந்த ஸந்நிதி திருக்குறுங்குடி ஜீயர் ஆதிக்கத்தில் உள்ளது.

பகவான் வாமன த்ருவிக்ரம அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது திருவடி சதங்கையிலிருந்து சிலம்பாறு உண்டானதாக ஸ்தல வரலாறு.

ஒரு ராஸஷன் ப்ராம்மணனைக் கொல்லவர, கொல்வது பாவம் என்று ப்ராம்மணன் சொல்ல, அது என் தொழில் என்று ராக்ஷஸன், விவாதம் முற்றியதால், பகவான் வேடம் போல் வேஷம் பூண்டு வந்து, அவர்களுக்கு உபதேசித்த படி திருப்பாற்கடல் தீர்த்தத்தில் ஸ்நாநம் செய்து ரிஷிகள் உபதேசம் பெற்று அகஸ்தியரை வணங்கி, இருவரும் துவேஷத்தை விட்டு, முக்தியடைந்ததாக ஸ்தலபுராணம்.

சிவ பெருமான் ப்ருஹ்மாவின் தலையைக் கிள்ளி கபாலம் கையில் ஒட்டிக்கொள்ள பகவான் சொல்லியபடி, திருக்குறுங்குடிவல்லி அம்ருத¬க்ஷயிட்டு, சாபம் நீங்கி பகவான் உபதேசித்த ஸுதர்சன மந்த்ரத்தை ஜபித்து சுத்தனானான்.

மங்களாசாஸனம் -

பெரியாழ்வார் - 71

திருமழிசையாழ்வார் - 813

திருமங்கையாழ்வார் - 1005, 1399, 1470, 1788-1807, 2065, 2674 (114)

நம்மாழ்வார் - 2782, 2986, 3161-71

மொத்தம் 40 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருச்சிரீவரமங்கை
Next