அணைவது

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

அணைவது

ஆழ்வார், உலகத்தாருக்கு அரிய உபதேசங்களைச் செய்கிறார்.

எம்பெருமானது வீடு அளிக்கும் தன்மை

கொச்சகக் கலிப்பா

பிறவிக்கடல் கடத்தும் தெப்பம்

2864. அணைவது அரவணைமேல் பூம்பாவை யாகம்

புணர்வது, இருவ ரவர்முதலும் தானே,

இணைவனா மெப்பொருட்கும் வீடு முதலாம்,

புணைவன் பிறவிக் கடல்நீந்து வார்க்கே.

எம்பெருமானது தொடர்பின் சிறப்பு

2865. நீந்தும் துயர்ப்பிறவி யுட்படமற் றெவ்வெவையும்,

நீந்தும் துயரில்லா வீடு முதலாம்,

பூந்தண் புனல்பொய்கை யானை இடர்கடிந்த,

பூந்தண் டுழாயென் தனிநா யகன்புணர்ப்பே.

மும்மூர்த்தியானவன் திருமாலே

2866. புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்,

புணர்த்ததன் உந்தியோ டாகத்து மன்னி,

புணர்த்த திருவாகித் தன்மார்வில் தான்சேர்,

புணர்ப்பன் பெரும்புணர்ப் பெங்கும் புலனே.

திருமால் புகழையே ஓதுக : மோட்சம் உண்டு

2867. புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி,

நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்,

அலமந்து வீய அசுரரைச் செற்றான்,

பலமுந்து சீரில் படிமின்ஒ வாதே.

ஹயக்ரீவனாக அவதரித்தவன் தேவாதிதேவன்

2868. ஒவாத் துயர்ப்பிறவி யுட்படமற் றெவ்வெவையும்

மூவாத் தனிமுதலாய் மூவுலகும் காவலோன்,

மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்,

தேவாதி தேவ பெருமானென் தீர்த்தனே.

பைந்துழாயான் பெருமையே பெருமை

2869. தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்,

சேர்த்தி யவையே சிவன்முடிமேல் தான் கண்டு,

பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை

பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே?

திருமாலின் மாயை யாருக்கூத தெரியும்?

2870. கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக்

கிடந்திடும், தன்னுள் கரக்கும் உமிழும்,

தடம்பெருந்தோ ளாரத் தழுவும் பாரென்னும்

மடந்தையை,மால் செய்கின்ற மாலார்காண் பாரே?

எங்குமுளன் கண்ணன்

2871. காண்பாரார் எம்மீசன் கண்ணனையென் காணுமாறு,

ஊண்பேசி லெல்லா வுலகுமோர் துற்றற்றா,

சேண்பால வீடோ வுயிரோமற் றெப்பொருட்கும்,

ஏண்பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே.

சிங்கபிரான் பெருமையை யாராலும் உணரமுடியாது

2872. 'எங்கும் உளன் கண்ணன்' என்றமக னைக்காய்ந்து,

'இங்கில்லை யால்' என் றிரணியன் தூண்புடைப்ப,

அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய,என்

சிங்கப் பிரான்பெரமை யாராயும் சீர்மைத்தே?

எல்லாமாய் நின்ற கண்ணனைக் கண்டேன்

2873. சீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகீறா,

ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்,

வேர்முதலாய் முத்தாய்ப் பரந்து தனிநின்ற,

கார்முகில்போல் வண்ணனென் கண்ணனை நான் கண்டேனே.

இவற்றை படிப்போர் சுவர்க்கம் ஆள்வர்

2874. கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை

வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்,

பண்டலையில் சொன்னதமிழ் ஆயிரத்திப் பத்தும்வல்லார்,

விண்டலையில் வீற்றிருந் தாள்வரெம் மாவீடே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளே சுவர்க்கம்

அணைந்தவர்க டம்முடனே ஆயனருட் காளாம்,

குணந்தனையே கொண்டுலகைக் கூட்ட, - இணங்கிமிக

மாசிலுப தேசஞ்செய் மாறன் மலரடியே,

வீசு புகழெம்மா வீடு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கேசவன் தமர்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  எம்மாவீடு
Next