Temple Gopuram - Kamakshi Temple, Kanchipuramகோயில்கள்

முன்னோர்களுடைய பண்பாடுகளையும் நாகரீகங்களையும் அறிவதற்குரிய சின்னங்களில் சிறந்தனவாய் அமைந்தவை கோயில்கள். இவைகளில் சிற்பமும் ஓவியமும் சித்திரமும் சேர்ந்து கலைக் காட்சிகளாய் விளங்குகின்றன. எல்லாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கும்படியான யாவற்றையும் கடந்த பேராற்றலுடைய ஓர் பரம்பொருள் உண்டென்பதையும், அது எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதையும் நம் முன்னோர்கள் உறுதியாகக் கண்டார்கள். அவ்வுறுதியைப் புலப்படுத்துவதற்கு, உறுதியான கருங்கல்லிலும், பிற உலோகங்களிலும் பல வடிவங்களை அமைத்தார்கள். கோயிலுக்கு அங்கங்களாகிய கோபுரம், விமானம், மண்டபம், தூண்கள் முதலியவைகளையும் அழகிய சிற்பத்திறத்துடன் அமைத்தார்கள். ஓவியங்களையும் சித்திரங்களையும் தீட்டிவைத்தார்கள். சிற்றன்ன வாயில் முதலிய இடங்களில் பழங்காலச் சித்திரங்கள் முதலியவைகளைக் காணலாம்.

யாவற்றையும் கடந்த பரம்பொருளாகிய இறைவன் உலகத்திலுள்ள உயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் பெற்று உய்யும் வண்ணம், கடந்த நிலையான அருவ நிலையிலிருந்து இறங்கி இவ்வுலகத்தில் ஆங்காங்குள்ள பல இடங்களில் உருவத் திருமேனிகொண்டு எழுந்தருளி, பக்தியுடன் வழிபடும் அடியார்களுக்கு அருள் செய்து வருகிறான். அத்தகைய சிறப்பிடங்களே கோயில்கள் ஆகும்.

பசுவின் உடல் முழுவதும் பால் மறைந்திருந்தபோதிலும், மடியின் மூலமாகவே பால் வெளிப்படுவதுபோலவும், சூரியன் எங்கும் பரவியிருந்த போதிலும், கண்ணாடிகள் மூலமே கிரணங்கள் வெளிப்படுவதுபோலவும், நிலத்துக்கு அடியில் நீர் இருந்தபோதிலும் தோண்டிய இடத்தில் தானே நீர் தோன்றுவதுபோலவும், இறைவன் எங்கும் வியாபித்திருந்தபோதிலும் பெரியோர்கள் அமைத்த ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் மூலமாகவே அவன் வெளிப்பட்டு அன்பர்களுக்கு அருள் செய்வான்.

“எங்கும் சிவனிருப்பன் ஆனாலும் ஏசற்ற

சங்கமத்தும் சற்குருவின் தன்னிடத்தும்-லிங்கத்தும்

ஆவினுடன் பெல்லாமும் ஆவரித்து நிற்கினும்பால்

பரவுமுலைக் கண்மிகுதிப் பார்.”

மேலும் மின்சார அணுக்கள் நிறைந்த இடம் (power house) போன்றது திருவருள் அணுக்கள் நிறைந்த சிறப்பிடம். எழுத்தின் ஒலிவடிவத்தை உணர்த்துவதற்கு வரிவடிவெழுத்து அமைந்ததுபோலக் கட்புலனால் காணமுடியாத கடவுளைக் காட்டும் சாதனங்களாகக் கோயில்கள்  விளங்குகின்றன. இவைகளை முன்னோர்கள் தம் உயிரினும் மேலாகப் பாவித்துப் பின்வழியினராகிய நமக்குச் செல்வங்களாக, செல்வன் கழலேத்தும் செல்வங்களாக, வைத்துச் சென்றார்கள். நாட்டின் நலத்துக்கும், மக்கள் வாழ்வுக்கும் கோயில்கள் இன்றியமையாதன. வாழ்க்கைக் கடலில் அகப்பட்டுத் துன்புறும் மக்களுக்குக் கோயில்கள் கலங்கரை விளக்கமாக (light house) விளங்குகின்றன. “கோயில் விளங்கக் குடி விளங்கும்” என்பதும் பழமொழி.

இனி இறைவனுக்குரிய அருவம், அருவுருவம், உருவம் என்ற மூன்று நிலைகளில், அருவம் என்பது கண்ணுக்குத் தோன்றாமல் ஆகாயத்தில் நுண்பொருள் அடங்கியிருப்பது போல எல்லாப் பொருள்களிடத்தும் கலந்து ஊடுருவி நிற்பது. “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பர். அருவ நிலையில் உள்ள இறைவன் உயிர்களின் பொருட்டுத் தன் நிலையிலிருந்தும் இரங்கி அடுத்த நிலையாகிய அருவுருவத்தில், அருவமும் உருவமும் கலந்த நிலையில் அதாவது லிங்க வடிவத்தில் காட்சி தருகிறான். அருவம் கண்ணுக்குத் தோன்றாதது. உருவம் கண்ணுக்குப் புலப்படுவது. இந்த இரண்டும் சேர்ந்ததே லிங்கம் என்பர்.

“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்

நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிலைலிங்கம்”

இந்த அருவுருவ வடிவாகியன் சிவலிங்கமே எல்லாக் கோயில்களிலும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தத்துவங்களும் லிங்கத்தில் அடங்கியுள்ளன என்று கூறுவர். பிறநாடுகளிலும் ஒரு காலத்தில் லிங்க வழிபாடு நடந்ததாக ஆராய்ச்சியினால் தெரியவருகிறது. இந்தச் சிவலிங்கத்தில், அருவுருவ நிலையில் விளங்கும் இறைவன் தனது நிலையிலிருந்து மேலும் இறங்கி, பரிப்பக்குவம் பெற்ற, தீவிர பக்தியுள்ள அடியார்களுக்கு அருள் செய்வதற்கு உருவ நிலையில் மனித வடிவம் தாங்கி, குருவடிவாக வருகின்றான். அவ்வப்போது அருள் செய்வதற்குப் பெருமான் அவ்வப்போது எடுத்துக்கொண்ட வடிவங்கள் இருபத்தைந்து எனக் கூறுவர். அவ்வடிவங்கள் தக்ஷிணாமூர்த்தி, நடராஜர், சோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், சந்திரசேகரர் முதலியன. கோயில் வழிபாட்டில் அருவுருவம் கலந்த லிங்கத்தைத் தரிசித்த பிறகு, உருவ வடிவத்தில் விளங்கும் மற்ற மூர்த்திகளையும் வணங்கி வருகிறோம். இவ்வாறு அருவ நிலையில் நின்ற பெருமான், அருவுருவாகவும், உருவாகவும் காட்சி தருகிறான். அடியார்களின் பொருட்டே படிப்படியாக இறங்கி வந்து அருள் செய்கிறான்.

மேலும், திருவிழாக் காலங்களில் பெருமானும் தேவியும் பல வாகனங்களில் அமர்ந்து வீதிகளில் வந்து காட்சி தருகிறார்கள். மக்களும் வீட்டில் இருந்தபடியே தரிசிக்கிறார்கள். இவ்விதக் கருணை, இருக்கும் இடந்தேடி இன்னமுதம் ஊட்டுவது போல் உள்ளது. இவை யாவற்றுக்கும் அடிப்படையாய் உள்ளது கோயிலேயாகும். அருவம், உருவம், அருவுருவம் மூன்றும் ஒருசேர அமைந்த இடம் கோயில் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரம் ஆகும்.

தென்னாட்டில் சமயத் தலைவர்களால் தேவாரம் பாடப்பெற்ற 274 தலங்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திருப்பதிகளும், திருப்புகழ் பெற்ற முருகன் கோயில்களும், பெயர் மட்டும் குறிக்கப் பெற்ற வைப்புத்தலங்களும், தலபுராணங்களைப் பெற்ற கோயில்களும், தனிப்பாடல் பெற்ற தலங்களும், அன்பர்களால் அமைக்கப் பெற்ற அபிமானத் தலங்களும், பிற தலங்களும் அடங்கியுள்ளன.

நம் நாட்டில் எங்கே பார்த்தாலும் கோயில்களும் தீர்த்தங்களும் சிவலிங்கங்களும் நிறைந்து, அடைந்தவர்க்கு அருள் வழங்கும் நிலையில் இருப்பதை. திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பின்வரும் பாடலில் காட்டுகிறார்.

“நோக்கிய இடங்கள் எல்லாம் நுவலருந் தலங்க ளாகத்

தேக்கிய தீர்த்த மாகச் சிவலிங்க மூர்த்தி யாக

ஆக்கிய தவத்தால் நாளும் அடைந்தவர்க் கறமென் றோதும்

பாக்கிய மாக்கி மேலுய்ப் பதுமுது சென்னி நாடு”.

மனிதர்களேயல்லாமல் மனிதர்க்குக் கீழ்ப்பட்ட அஃறிணை உயிர்களாகிய யானை முதல் எறும்பு வரையுள்ள உயிர்களும் தனித்தனியே வழிபட்ட கோயில்களும் உள்ளன. யானை,பசு, குரங்கு, பாம்பு, ஈ, முயல், எறும்பு, தவளை, நாரை, மயில் முதலியன வழிபட்ட தலங்கள் முறையே திருவானைக்கா, ஆவூர், ஆடுதுறை, சீகாளத்தி, ஈங்கோய்மலை, திருப்பாதிரிப்புலியூர், திருவெறும்பூர், ஊற்றத்தூர், நாரையூர், மாயூரம் முதலியன.

சைவ சித்தாந்தத்தின் முப்பொருள்களாகிய பதி, பசு, பாசம் மூன்றையும் அறிவிக்கும் இடமாகவும் கோயில் விளங்குகிறது. சிவலிங்கமே பதியாகவும், ஏறு பசுவாகவும், பலிபீடம் பாசமாகவும் அமைந்துள்ளன.

“ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்

ஆய பசுவும் அடல் ஏ றென நிற்கும்

ஆய பலிபீட மாகும்நற் பாசமாம்

ஆய சுரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே”.------திருமந்திரம்

இவ்வாறு புறத்தே கோயில்கொண்டு விளங்கும் பெருமான் பக்தியுடன் வழிபடும் அடியார்களின் உள்ளத்தையும் பெருங்கோயிலாகக் கொண்டு அருள் செய்கிறான்.

“காலையும் மாலையும் கைதொழு வார்மனம், ஆலயமாகும்” -------அப்பர்

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.” -------திருமந்திரம்

ஆதலின் பெறற்கருமையான மனிதப் பிறவியைப் பெற்றவர் அனைவரும், ஆன்றோர்கள் அமைந்த கோயில்களில் குடிகொண்ட பசுபதியாகிய பரமனை அன்பினால் வழிபட்டு, அவன் வகுந்த நன்னெறியில் சென்று அருள்பெற முயல வேண்டும்.

“உடம்பினைப் பெற்ற பயன தெல்லாம்

உடம்பினில் உத்தமனைக் காண்”    -ஔவையார்

“மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்

ஆனிடத் தைந்தும் ஆடும் அரன் பணிக் காக அன்றோ?

வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர்

ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ ! –சிவஞானசித்தியார்

 


Home Page