சாஸனங்கள் தெரிவிக்கும் ஆலய வழிபாட்டு முறை

தமிழகத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைமுறையில் ஆலய வழிபாடுகள் எப்படி நடந்துவந்தன என்பதைச் சிலாசாஸனங்களிலிருந்தும் தாமிரசாஸனங்களிலிருந்தும் அறிந்துகொள்ள இயலுகிறது. நம் நாட்டைப் பண்டைக் காலங்களில் சேரர், சோழர், பாண்டியர் என்ற மன்னர்கள் ஆண்டார்கள் என்று சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன. இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை. இந்த இலக்கியங்களில் கடவுள் வழிபாடுகளும் கடவுளர் உருவங்களும் கூறப்பட்டுள்ளன. ஆனால் அக்காலத்திய சாஸனங்கள் ஹிந்து ஆலய வழிபாட்டைப்பற்றி ஏதும் கூறவில்லை. அவை பெரும்பாலும் இயற்கைக் குகைத் தளங்களில் வசித்து வந்த சமணப் பெரியார்களுடையவையாகக் காணப்படுகின்றன. கி.பி. 600-இல் கச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட முதலாம் மகேந்திரன் என்ற பல்லவ மன்னன் காலத்திலிருந்துதான் சாஸனங்கள் ஹிந்துக்களின் ஆலயங்களைப்பற்றிக் கூறுகின்றன. கி.பி. 600இலிருந்து கி.பி.850 வரை சுமார் 250 வருடகாலம் பல்லவர் ஆட்சி தமிழ்நாட்டில் மேலோங்கியிருந்தது. சுமார் கி.பி. 850 இலிருந்து கி.பி.1110 வரை சோழர்களது ஆட்சி மேலோங்கியிருந்தது. இக்காலத்திய சாஸனங்களிலிருந்து நாம் பெரும்பாலும் ஆலய நிர்மாணம் முதல் நித்திய வழிபாடு, திருவிழாக்கள், திருப்பணிகள் முதலியவைபற்றி அறியமுடிகிறது. பொதுப்படையாகப் பார்ப்போமானால் இன்று நம் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்விதம் இருந்தனவோ அதேபோல் தான் உள்ளன.

ஆலயங்களை மன்னர்களும் பொதுமக்களும் பொதுஜனங்களின் நலனுக்காகவும் உலக க்ஷேமத்துக்காகவும் கட்டிவைத்தனர்.प्रजानां इश्टसिध्यर्थं शाङ्करीं भूतिमिछता ।तेनेदं कारितं शंभो: भवनं भूतये भुव:॥ என்று பல்லவ மன்னனான ராஜசிம்மனின் சாஸனங்கள் கூறுகின்றன. இவ்விதமே அரசமாதேவியரும் பல கோயில்களை எழுப்பியுள்ளனர். கோயில்களைத் தோற்றுவித்த பெரியார்கள் தங்கள் பெயர்களையே கோயில்களுக்கு இட்டனர். மகேந்திரவர்மன் தோற்றுவித்த திருச்சி மலைமேலுள்ள குகைக்கோயிலுக்கு ‘லலிதாங்குர பல்லவேச்வர க்ருஹம்‘ என்று பெயர். ராஜசிம்மன் கட்டிய கோயில்களுக்கு ‘ராஜஸிம்ஹ பல்லவேச்வரம்‘, ‘அதீரண சண்டபல்லவேச்வர க்ருஹம்‘ என்றும், ‘அத்யந்தகாம பல்லவேச்வர க்ருஹம் என்றும் பெயர்கள் கண்கின்றன. அதுபோன்று பரமேச்வரவர்மன் கட்டிய கோயிலுக்குப் ‘பரமேச்வர மஹாவராஹ விஷ்ணுக்ருஹம்‘ என்றும் ‘பரமேச்வர விண்ணகரம்‘ என்றும் பெயர்கள் சாஸனங்களில் காண்கின்றன. இது தவிர, தமக்கு முன்னர் இறந்த பெரியவர்களுக்கு நினைவுக்கோயில்கள் கட்டப்பட்டன. இந்தக் கோயில்களுக்குப் பள்ளிப்படை என்று பெயர். காளஹஸ்தியில் முதலாம் ஆதித்தியசோழர் இறந்த பின்னர் அவர் நினைவாக அவர் மகனான பராந்தக சோழன் ‘ஆதித்யேச்வரம்‘ என்ற கோயில்களை எழுப்பினான் என அறிகிறோம். கோனேரிராஜபுரத்தில் கண்டராதித்தியரின் உடையபிராட்டியார் செம்பியன் மகாதேவியார் தம் கணவரின் பெயரால் திருக்கற்றளி எடுப்பித்தார் என்று அவ்வூரிலுள்ள சாஸனம் கூறுகிறது. பல்லவ மன்னனான நிருபதுங்கவருமன் காலத்தில் நார்த்தா மலையில் ஒரு குகைக்கோயில் குடைவிக்கப்பட்டது. அது அவருடைய மகளால் பெரிதாக்கப்பட்டது. “விடேல்விடுகு முத்தரையன் மகன் சாத்தன் பழியிலி குடைவித்த ஸ்ரீ கோயில். இச்சிறு கோயிலுக்கு முகமண்டகமும் இஷவமும் இஷவக் கொட்டிலும் பலிபீடமும் செய்வித்தாள் சாத்தம்பழியிலி மகள் மீனவன் தமிழதிரையன் பல்லன் அனந்தன் புக்க பழியிலி சிறியநங்கை‘ என்று அந்தச் சாஸனம் கூறுகிறது.

இவ்விதம் தோற்றுவித்த கோயில்களில் தெய்வத்தைப்பிரதிஷ்டை செய்வதுபற்றியும் ஜலஸம்ப்ரோக்ஷணம் செய்வதுபற்றியும் சாஸனங்கள் கூறுகின்றன. கண்டராதித்திய சோழர்காலத்தில் உள்ள சாஸனங்கள் “இக்கோயிலில் யாங்கள் ஸ்ரீ கோயில் எடுத்துப் பிரதிஷ்டை செய்வித்த கணபதியாருக்கு” என்று சொல்வதிலிருந்து எடுப்பித்த கோயிலிலே மூலவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்வது என்பது வழிவந்த வழக்கம் என்று தெரிய வருகிறது. “அந்துவந்துநல்லுர் நாட்டுத் திருவாலந்துறை பரமேச்வர்ருக்குச் செம்பியன் இருக்குவேளார் பூதிபராந்தகன் கற்றளி எடுத்து ஜலசம் ப்ரோக்ஷணம் செய்தநாள்” என்று மற்றொரு சாஸனம் கூறுகிறது. கட்டுவித்த கோயிலின்மேல் விமானத்தில் செம்பினாலான கலசத்தை வைப்பதைச் தஞ்சைப் பெரிய கோயிலை எடுத்த ராஜராஜனின் சாஸனம் கூறுகிறது. “ஸ்ரீ விமானத்துச் செம்பின் ஸ்தூபித்தறியில் வைக்கக் கொடுத்த செப்புக்குடம்.” இந்தச் செப்புக்குடத்தின்மேல் தங்கத்தகடு போர்த்தப் பட்டது.

நித்தியவழிபாட்டு முறைபற்றிப் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி. 670இல் அதாவது சுமார் 1300 வருடங்களுக்கு முன்னர் ஆண்ட பல்லவ மன்னன் பரமேச்வரவர்மனின் கூரம் செப்பேடுகள் மிக அழகாகப் பூஜைக்கிரமத்தைக் கூறுகின்றன. विद्यावीनीतपल्लवपरमेश्वरगृहे प्रतिष्ठापितस्य भगवत: पिनाकपाणे: पूज्यास्नापनकुसुमगन्धधूपदीपहविरुपहारबलिशङ्कपटहादिप्रवर्तनार्थं तत्रैव उदकमग्निभारताख्याननिमित्तार्थं च வித்யாவிநீத பல்லவ பரமேச்வர கிருஹத்தில் பிரதிஷ்டை செய்ய்யப்பட்டுள்ள பகவானும் பரமேஷ்டியும் ஆன பினாகபாணிக்குப் பூஜை, ஸ்நபனம், குஸீமம், கந்தம், தூபம், தீபம், ஹவிஸ் உபஹாரம், பலிசங்கம், படஹம் முதலியவைகளுக்கும் தண்ணீர் அக்கினி பாரதம் வாசிப்பவருக்கும் ஆன நிவந்தங்களென்று கூறுகிறது. இதற்குத் தேவகர்மம் என்றும், திருப்பணி செய்வதற்கு நவகர்மம் என்றும் பெயர். இதுவே தமிழில் “கூரத்துத் தளிக்கு, தேவகர்ம நவகர்ம செய்வதாகவும் கூரத்து மண்டகத்துக்குத் தண்ணீருக்கும் தீக்கும் ஒருபங்காகவும் இம்மண்டகத்து பாரதம் வாசிப்பாருக்கு ஒரு பங்காகவும்” என்று உள்ளது. இதற்கு முந்திய ஒரு பல்லவ சாஸனம் கோவிஜய சிம்மவர்மன் என்ற மன்னன் காலத்தியது. அதில் திரிகாலமும் ஆராதித்தல், திரிகாலம் அமிர்திடுதல் நந்தாவிளக்கெரித்தல் முதலியவைபற்றிக் குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் மூன்று சந்திகளில் பூஜை நடந்ததாகச் சாஸனங்கள் கூறுகின்றன. இதை முச்சந்திகள் என்றும், சிறு காலைச்சந்தி உச்சியம் போதுச் சந்தி இரவுச்சந்தி என்றும் அவை குறிப்பிடுகின்றன. சில இடங்களில் அர்த்தயாம சந்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பள்ளி எழுச்சியைப் பற்றிய பல சாஸனங்கள் கூறுவதிலிருந்து காலையில் பூஜை பள்ளிஎழுச்சியிலிருந்து தோன்றிற்று என்று அறியலாம். ஸ்ரீ ரங்கத்திலுள்ள குலோத்துங்க சோழனின் கல்வெட்டு இக்கோயிலில் ஆழ்வாருக்குத் திருப்பள்ளி எழுச்சி திருவாய்மொழி விண்ணப்பம் செய்யக்கடவோமாக என்று கூறுவதிலிருந்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிச்சென்ற திருப்பதிகங்களைப் பாடிக் கடவுளுக்குத் திருப்பள்ளிஎழுச்சி செய்தனர் என்று அறிய முடிகிறது. சைவக் கோயில்களில் அபிஷேகம் விசேஷமாக  நடைபெற்றது என்பதை, अभिषेकजलापूर्णे चित्ररत्नाम्बुजाकरे। आस्ते……என்ற ராஜசிம்மபல்லவனுடைய சாஸனத்திலிருந்து அறியலாம். முச்சந்திகளிலும் ஒன்றிலோ இரண்டிலோ அல்லது மூன்றிலுமோ ஆண்டவனுக்குத் திருமஞ்சன நீராட்டல் வழக்கத்தில் இருந்துவந்தது. மூலஸ்தானத்துப் பெருமானுக்கு மும்முறையும், உத்ஸவத் திருமேனி கோயிலுக்கு ஒரு சந்தியும் திருமஞ்சன நீராட்டல் என்பதும் பழக்கத்திலே இருந்து வந்தது. திருமஞ்சன நீருடன் தண்ணீரும் அபிஷேகத்துக்குத் தனியாக உபயோகப்படுத்தப்பட்டது  என்று அறிகிறோம். பேரரசன் ராஜராஜன் தான் கட்டுவித்த தஞ்சைப் பெரிய கோயில் மூலஸ்வாமிக்கும் உத்ஸவருக்கும் வேண்டிய திருமஞ்சனத்திற்கென்று ஒரு தனிச் சாஸனமே செய்து வைத்துள்ளான். “ராஜராஜேச்வர முடையார் அடியருளும் திருமஞ்சன நீரிலும் தண்ணிர் மீதிலும் இட பெரும்செண்பக முட்டுக்கும் ஏலவரிசிக்கும் இலாமச்சத்துக்கும் வேண்டும் நிபந்தம்” என்று அந்தக் கல்வெட்டுக் கூறுவதிலிரு‘ன்து திருமஞ்சன நீரிலே சண்பகமொட்டு, ஏலவரிசி, இலாமிச்சைவேர் முதலியவை போடப்பட்டன என்று அறிகிறோம். சில வைணவக்கோயில்களில் மூன்று சந்தியும் திருமஞ்சன நீராட்டல் வழக்கத்தில் இருந்துவந்தது. மற்ற இடங்களில் சில விசேஷ தினங்களில் எண்ணெய்க்காப்புச் சாத்துவதும் பழக்கத்தில் இருந்து வந்தது என்று அறிகிறோம்.

செய்யூர் என்ற இடத்தில் உள்ள ராஜேந்திர சோழனின் மகனான ராஜாதிராஜனின் கல்வெட்டு “மதுராந்தக விண்ணகர ஆள்வாருக்கு அக்கோயிலில் காணியுடைய வைகானசன் ஆளி ஆராவமுது ஆளிதாமோதரனான வேங்கடவன் நித்தம் இரு திருமஞ்சனக்குடம் அபிஷேகம் பண்ணி திருமாலை சாத்தப் பழங்காசு” என்று கூறுகிறது. இதிலிருந்து வைகானஸ ஆகமம் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தியது என்றும், வைகானஸ ஆகம முறைப்படி சில வைணவக் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது என்றும் அந்தக் கோயில்களில் திருமஞ்சனநீராட்டல் நித்தமும் இருந்து வந்தது என்றும் அறிகிறோம். திருவரங்கத்திலுள்ள “திருஅரங்கத்துப் பெருமானடிகளுக்குத் திருமஞ்சனம் புக்கு அருளசகஸ்தரதாரை ஒன்றினால்” என்று மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மரின் சாஸனம் கூறுவதிலிருந்து திருவரங்கப் பெருமானுக்குத் திருமஞ்சன நீராட்டல் நடைபெற்றது என்று அறிகிறோம்.

திருமஞ்சனநீரைப் பிராம்மணன் ஒருவன் பக்கத்திலுள்ள நதியிலிருந்து கொண்டுவருவதும் உண்டு. சைவ ஆலயங்களில் எண்ணெய்க்காப்புகளுக்குப் பல நிவந்தங்கள் கொடுக்கப்பட்டன. எண்ணெய்க்காப்பு, சில கோயில்களில் தினந்தோறும் இருந்துவந்தது. சில கோயில்களில் வாரத்தில் இரு நாட்களோ அல்லது ஒரு நாள் மட்டுமோ இருந்துவந்தது என்றும் சாஸனங்கள் கூறுகின்றன. பஞ்சகவ்வியம் அடியருளல் என்றும் அந்தப் பஞ்ச கவ்வியத்துக்கு வேண்டிய பொருளும் அவற்றின் ஒரு சாஸனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. “கோமூத்திரம் உழக்கு, கோமயம் ஆழாக்கு, பால் நாழி உழக்கு, தயிர் நாழிஉறி நெய்நாழி” என்று அது கூறுகிறது. நெய்யாடி யருளல் பாலாடியருளல் திருச்சாந்துயாடியருளல் என்பதும் சாஸனங்களில் வருகின்றன. கோவை மாவட்டத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு கல்வெட்டு, “அமுதுபடி, சாத்துப்படி, திருமேற்பூச்சு, சந்தியாதீபம், திருவிளக்கு, திருப்பணி, திருநாட்தேவை, அவிபலி அர்ச்சனை, வித்த கர்மம், பலமடி நிபந்தம்” என்று பூஜைமுறையைக் கூறுகிறது.

ஸ்ரீ ரங்கத்தில் சந்தணச்சாத்து, புழுகுநெய், கஸ்துரி, கர்ப்பூரம், உள்ளிட்ட சாத்துப்படி திருவரங்கப்பெருமானுக்கு இடப்பட்டது என்றும், “கார்த்திகை மாதத்துத் திருக்கார்த்திகைத் திருநாளில் பெரியபெருமாளுக்குப் புழுகுநெய் சாத்தியருள” என்றும் ஒரு கல்வெட்டுக் கூறுவதிலிருந்து புழுகுநெய் சாத்துவது வைணவக் கோயிலில் வழங்கிவந்த முறை என்று அறிகிறோம். அதே கோயிலிலுள்ள மற்றொரு சாஸனம், “எண்ணைக்காப்பு நெல்லிக்காப்பு மஞ்சக்காப்பு சந்தனக்காப்பு திருப்பள்ளிதானம் திருமாலை திருப்பரிவட்டம் பறிந்து உள்ளிட்ட சாத்துப்படிகள்” என்று கூறுகிறது. திருப்பள்ளிதாமம் பறிந்து ஆண்டவனுக்குச் சாத்தினர் என்றும் பெருமக்கள் திருமாலைகளைத் தங்களது பேரால் செய்து தினமும் சாத்துவதற்கு நிவந்தம் செய்தனரென்றும் அறிகிறோம். இதற்குச் செங்கழுநீர் மலர் பயன்பட்டது என்று சில இடங்களில் சாஸனங்கள் கூறுகின்றன. அரைத்த சந்தனத்தையே ஆண்டவனுக்கு இட்டனர் என்பதற்கும் சான்றுகள் பல உள்ளன. “திருச்சந்தனம் தேய்க்கும் பிராமணன் ஒருவனுக்குக் கப்படம்முட்பட நிஸதம்” என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இவ்விதம் அபிஷேகங்களால் பூஜிக்கப்பட்ட ஆண்டவனுக்குப் பரிவட்டம் சாத்துவதும் வழக்கத்தில் இருந்தது. கோனேரி ராஜபுரத்தில் உள்ள செம்பியன் மகாதேவியாரின் சாசனம் கோயில் வழிபாட்டுமுறைபற்றி மிகவும் வியக்கத்தக்க முறையிலே பல வழிகளைக் குறிப்பிடுகிறது. அதில் “திருமணிகைக்கும் திருவிதானத்துக்கும் திருமேற்கட்டிக்கும் ஜலபவித்திரத்துக்கும் திருஒற்றடைக்கும்” என்று கூறுவதிலிருந்து இவை வழிபாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட்டன என்றும் அறிகிறோம். ராஜராஜசோழனின் தஞ்சைக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு “இவர்க்கே சாத்தும் திருப்பரிவட்டத்துக்குக் காசு இருபத்தாறும் திருமணிகை நாலுக்குக் காசு இரண்டும் திருஓற்றாடை நான்குக்குக் காசு இரண்டும், திருமேற்கட்டி நான்குக்குக் காசு இரண்டும், திருப்பாவாடை பதினாறுக்குக் காசு நாலும்” என்று கூறுகிறது. சில இடங்களில் சிறந்த பட்டினாலான பரிவட்டங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்விதம் கூறும் சாஸனங்களில் புலியுர்ப்பட்டு, பச்சைப்பட்டு முதலியவை கூறப்பட்டுள்ளன. இவை அடிக்கடி மாற்றப்பட்டன. புதிய பட்டுகள் கொடுக்கப்பட்டன. மூல ஸ்தானத்துப் பட்டாரருக்கு ஆபரணங்கள் சாத்துவதும் ஜந்தலை நாகம் சாத்துவதும் சாஸனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நைவேத்தியங்களைப் பற்றியும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. இவற்றிலிருந்து, சுமார் 1300 வருடத்திற்கு முன்னர் எவை எவை படைக்கப்பட்டனவோ அவையே இன்று வரையிலும் திருஅமிர்தாக இடப்பட்டன என்று அறிகிறோம். அநேகமாக எல்லாக் கல்வெட்டுக்களிலும் கூறும் அழுதுபடி பல்லவர் காலம் தொட்டு இக்காலம் வரை ஒரே மாதிரியாக இருப்பது மிகவும் விசேஷமாகும்.    


Home Page