ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர்: 10       கீலக வருஷம் மாசி மாதம் இதழ்1
12-2-1969


கண்ணனே கதி…

மகாபாரதத்தில், த்ரௌபதி துகிலுரிக்கப்பட்ட கதையை யாவரும் அறிவர். சபையோ பெரிது. கொடியவர்களான கெளரவர்கள் வெற்றியினால் மதிமயங்கித் தாம் செய்யும் கொடுமையின் அநீதியை உணராமல் அந்தப் பத்தினித் தெய்வத்தை மானமிழக்கச் செய்ய உறுதி கொண்டு நின்றார்கள். பாண்டவர்களோ சத்தியத்துக்குத் கட்டுப்பட்டு அவமானத்தால் தலைகவிழ்ந்து ஒன்றும் செய்ய இயலாமல் ஓய்ந்து விட்டார்கள். தருமம் அறிந்த பெரியோர்கள் தாம் யாது சொல்லியும் அவையெல்லாம் கொடுமையே உருவெடுத்த துரியோதனனிடம் நடவாமையை உணர்ந்து செயலற்று நின்றார்கள். அபலையான துரெளபதியின் இரக்கச் சொற்களும் நியாயவாதங்களும் ஒருவர் செவியிலும் விழவில்லை. அவளுக்கு மிகவும் மோசமான நிலைமை வந்துவிட்டது. கொடும்பாவியான துச்சாதனன், ஆணவத்தின் உச்சத்தில் நின்றவனாகி, தான் செய்வது தனக்கும் தன் குலத்துக்கும் அழியாப் பழியாகுமே என்பதை எண்ணாமல் அவள் துகிலைத் தொட்டு உரியலானான். அவளுக்குத் துணை ஒருவருமில்லை. யானையைப் போன்ற அந்தத் தடியன் முன் அவள் என்ன செய்வாள்? ஒரு கணம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வாள் போல் புடைவையைப் பிடித்துக்கொண்டு முரண்டு பார்த்தாள். இனித் தன் செயலால் ஆவதொன்றுமில்லை என்பதையும், உலகத்தில் தன்னை அந்தச் சமயத்தில் காப்பவர் எவரும் இல்லை என்றும் நன்றாக உணர்ந்தாள். அவள் தன்னை மறந்தாள். தான் நின்ற இடத்தை மறந்தாள். தன் கணவரை மறந்தாள். அந்த நேரத்தில் தன்னைக் காப்பவன் கண்ணன் ஒருவனே என்று உணர்ந்தாள். அவன் திருவடியைத் தன் இதயத்தில் சேர்த்தாள். இந்த நிலையில் அவள் நிலைமையையும் செயலையும் வில்லிபுத்தூரார் வாக்கில் காண்போம்.
ஆறாகி யிருதடங்கள் அஞ்சன வெம்புனல் சோர அளகம்சோர,
வேறான துகில்தகைந்த கைசோர மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்றரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற உடல்புளகித்து உள்ள மெல்லாம் உருகினானே.
அவள் கண்ணீர் அஞ்சனத்தைக் கரைத்துக்கொண்டு ஆறாகப் பெருகி வடிந்தது. கூந்தல் குலைந்து அவிழ்ந்தது. துகிலைப் பிடித்திருந்த கைகளை உயரத் துக்கினாள். உடல் சோர்ந்து துவண்டது; வேறு எதனையும் சொல்லாமல் ‘கோவிந்தா! கோவிந்தா!’ என்று அரற்றினாள். இப்படி யோகிகளும் நிறுத்தமாட்டாத நிலையில் தன் இருதயத்தை நிறுத்தித் தன்னையும் தன் சுற்றுப்புறங்களையும் மறந்து அவனுடைய திருவடித் தாமரையில் நின்றபோது, அதிலிருந்து வடிந்த அமிர்தம் தாரையாக அவள் அள்ளத்தில் விழுந்தது. அதன் ஆனந்தத்தால் அவள் உடல் புளகித்தது. அவள் முற்றும் உருகிவிட்டாள்.
பின் நிகழ்ந்தவற்றை நாம் அறிவோம்.
இத்தகைய வரலாறுகள் நம் முன்னோர்களின் வாழ்வில் எவ்வளவோ நடந்துள்ளன. இவற்றைச் சற்று ஆராய ஆராய நாம் பின்பற்ற வேண்டிய உண்மைகள் பல புலப்படும். நாம் எந்த அளவுக்குக் கடவுளையே நம்பி நிற்கிறோமோ அந்த அளவுக்கு அவருடைய அருள் நம்மிடம் சடுதியிலும் பூர்ணமாகவும் வருகிறது. இது உண்மை; முக்காலும் உண்மை. இதனை அறியாமல்தான் நாம் அல்லலுறுகிறோம். நம் தியாகத்தின் உண்மையையும் அளவையும் பொறுத்திருக்கிறது பயன். அவன் அருளே வடிவானவன். நாம் அவனை நெருங்க நெருங்க அவன் நமக்குச் சமீபனாகிறான். 
இதினின்று ஒரு படி மேலே சென்று ஆராய்வோம். துன்பத்தைக் கேட்டு உதவ மட்டுந்தான் கடவுள் இருக்கிறானோ? மகனுக்குச் செலவுக்குக் கொடுப்பது மட்டுந்தானா தகப்பனின் உரிமை? மகனுக்கு வரும் லாபங்களை அறிவதில் அவனுக்குப் பங்கு இல்லையா? தகப்பனும் மகனும் வேற்றுமையற்றவர் என்பது உண்டாக வேண்டுமானால், இருவருக்கும் நன்மை தீமைகளில் ஒத்த உரிமை காட்ட வேண்டும். கடவுளாகிய நம் பிதாவோ பூர்ணமானவர்; சுக துக்கம் அற்றவர். ஆகையால் மக்களாகிய நாம்தாம் நம் நன்மை தீமைகள் இரண்டிலும் அவருடைய பங்கைக் கொடுக்க வேண்டும். அவருடைய பங்கு எது என்பதை நாம் உணர வேண்டும். துரெளபதி தன் துக்கத்திலும் ஆபத்திலும் எவ்வளவு பங்கை இறைவனிடம் கொடுத்தாள்? ‘நான் ஒரு கையால் முயல்கிறேன்; நீ ஒரு கை கொடு’ என்றாளா? தன்னையே அவனிடம் அடைத்துவிட்டாள் அன்றோ? அந்த நிலையில்தானே அவனுடைய அருள்மடை திறந்தது? அதைப்போல நாம் செய்யும் தருமங்களையும் அவனுக்கே ஒப்படைக்க வேண்டும். செய்வதொன்றே நமக்கு உரியது; அதன் பலன் யாதாயினும் அவனைச் சார்ந்தது என்று விட்டுவிட்டால் அதனால் நாமே மிகுந்த லாபமடைபவர் ஆகிறோம். கோடீசுவரான தகப்பனிடம், நூறு ரூபாய் சம்பளம் பெறும் மகன், அந்த நூறு ரூபாயையும் மிச்சமில்லாமல் கொடுத்துவிடுவானானால், அந்தத் தகப்பன் அந்த மகனுக்கு ஆகவேண்டிய செலவுகளையெல்லாம் தானே முன் நின்று செய்துவைக்கிறான். அல்லவா? ஆகவே, நாம் செய்யும் தருமங்களும் அவனைச் சேர்ந்தனவாக விட்டுவிடுவதனால் நாம் பெறும் பாக்கியத்துக்கு அளவே இராது.
உண்மையை அறிந்த நம் பெரியோர்கள் இந்த நிலையில்தான் நின்றிருக்கிறார்கள். மாணிக்கவாசகர்,
அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் எனைஆட் கொண்டபோதே கொண்டிலையோ?
இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே,
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே?
என்று தம் ஆவி உடல் உடைமை எல்லாவற்றையும் அர்ப்பித்துத் தாம் வெறுமனே நின்றார். அதனால் அவர் பெற்ற தென்ன? ‘தந்தது உன்றன்னைக் கொண்டது என்றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்?’ என்று அவரே இறைவனை நோக்கி விளித்து, ‘அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றமை‘யை அவரே விடையிறுக்கிறார்.
இந்த உண்மையைத் தான் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குக் கீதையை முழுமையும் உபதேசித்து, அவனுக்கு உண்மை ஞானம் உதயமான நிலையில்,
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு ச: ||
“தர்மங்களை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து என்னைச் (ஒருவனையே) சரணமடைக; நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன்” என்று அறிவித்து உறுதி கூறுகிறார்.
இந்தக் கருத்தையே ஞானயோகத்தை உபதேசிக்கும் அவரே பகவத் கீதையில்,
“அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ||”
‘தம்மை விட்டு வேறாகாத என்னை எந்த மக்கள் உபாஸிக்கிறார்களோ அவர்களுடைய நித்ய யோக க்ஷேமங்களை நான் தாங்குகிறேன்” என்று கூறுகிறார்.
இவ்வளவு பெரிய சுமைதாங்கி நமக்காக இருக்கும்போது நாம் வழிநடையினால் கஷ்டப்படுவதேன்? ஆகவே, கண்ணனே கதி என்று சொல்லி, நாம் செய்யும் புண்ணியங்களை அவனுக்கே அர்ப்பித்து, நமக்குத் துன்பம் வரும்போது அவன் சரணங்களே கதி என்று இருப்போமாக.

Home Page