ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர்: 2       பிலவ வருஷம் - செப்டம்பர் 1961 இதழ் 8


கன்யையில் கன்யாபூஜையும் பித்ருபூஜையும்

பரிவர்த்தன ஏகாதசி, சிரவணத்வாதசி, விஸ்வரூப யாத்திரை, மஹாளயபக்ஷம், நவராத்திரி ஆரம்பம் முதலிய புண்ணிய நாட்கள் நிறைந்தது. கன்யா ராசியில் சூரியன் வரும் மாதம்.
अस्मै वै पितरौ पुत्रान् बिभृतः (யஜுர்வேதம் 6.1.6.) இதற்காகத்தான் பெற்றோர் புத்திரர்களைப் பரிக்கிறார்கள். ஸுபர்ணா என்னும் தாய் தன் புத்திரர்களை நோக்கிக் கூறும் சொல் இது. கத்ரூ என்பாள் ஸுபர்ணையை அடிமை கொண்டாள். அதிலிருந்து தன்னை விடுவிப்பது புத்திரர் கடமை என்று அவள் சொன்னாள். தன்னைத்தான் காத்துக்கொள்ள முடியாத சைசவத்தில் பல கஷ்டங்களை அநுபவித்துப் பெற்றோர் சிசுக்களைக் காப்பது எதற்காக? பெற்றோர் தம்மைக் காத்துக்கொள்ள முடியாதபோது புத்திரர்கள் பித்ருக்களைக் காப்பதற்காக அல்லவா?
ஸுபர்ணை கூறிய வண்ணம் ஸ்வர்க்கத்திலுள்ள ஸோமத்தைக் கொண்டு வர முயன்ற ஜகதீ, திருஷ்டுப் என்ற புத்திரர்கள் தம் பலத்தை இழந்து வெற்றி பெறாமல் திரும்பினர். காயத்திரி என்னும் புதல்வன் கிளம்பி, தேவலோகம் சென்றான்; சகோதரர் இழந்த பொருள்களையும் மீட்டு வந்தான்; ஸோமத்தையும் கொண்டுவந்து தாயை விடுவித்தான்.
இதையே பதினெண் புராணகர்த்தாவான வியாசர், “பாம்புகளின் தாயான கத்ரூ, கருடன் மாதாவான ஸுபர்ணையை அடிமையாக்கினாள். ஸ்வர்க்கத்திலுள்ள அமிருதத்தைக் கொண்டுவந்தால் அடிமை அகலுமென்று கத்ரூ கூறக் கேட்டார் கருடன். பெற்றோர் பெரியோர் ஆசியைப் பெற்று விண்ணுலகம் சென்றார்; வீரர்களுடன் போர் புரிந்தார்; வெற்றி கொண்டார்; தாயைக் காத்தார்” என்று சுவை நிறைந்த கதையால் வேதக் கருத்தைச் சித்திரித்துப் போஷித்தார்.

 

நம்மைப் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர் ஐம்பூத உடலையும் மண்ணுலகையும் விட்டனர். விண்ணுலகில் ஜலமயமான உடல் பெற்றுப் பித்ருக்களாகி வைவஸ்வதன் ஆதியின் கீழ் ப்ரஜைகளாக வாழ்கின்றனர். அது போக பூமி. அங்கே அவர்கள் தம் உடலுக்கு வேண்டியதைத் தேட முடியாது. இந்தச் சமயத்தில்தான், தாம் செய்த உதவிக்குக் கைம்மாறு வேண்டுகின்றனர். யமதர்மராஜன் கருணைகொண்டு பித்ருக்களை அவ்வுலகிலிருந்து மண்ணுலகுக்கு அனுப்புகிறார். ’புத்திரரிடம் சென்று உண்டு வாருங்கள்’ என்று. அந்தக் காலமே மஹாளய பக்ஷம் எனப்படும். பித்ருக்கள் வசித்த இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவோ அல்லது புத்திராதிகள் அளிக்கும் அன்னபானங்களை அருந்தி அவர்களை ஆசீர்வதிக்கட்டும் என்ற எண்ணங்கொண்டோ பித்ருக்களை அனுப்புகிறார். அவர்களும் ’அறுசுவை அன்னம் அகப்படும். பதினாறு நாட்களும் மஹாளய சிராத்தம் செய்வர். பெரும் உத்சவ காலம் அது’ என்று சுருதிப் புத்திரரை அநுக்கிரகிக்கின்றனர். அதனால்தான் மஹா ஆலயம் உத்சவ ஆனந்தத்துக்கு இருப்பிடம் என்ற பெயர் தோன்றிற்றோ? அந்தத் தினங்களில் ஒரு நாளாவது மஹாளய சிராத்தம் செய்யாவிடில் ஏமாற்றமடைந்து துக்கத்துடன், “உனக்குச் சிராத்தம் செய்யப் புத்திரனில்லாமல் போகட்டும். மண்ணுலகிலும் உள்ள உணவு கிடைக்காது” என்று சபித்துச் செல்வார்கள். பித்ரு சாபத்துக்கு ஆளாகாமலிருப்போம்.
प्रेतपक्षं प्रतीक्षन्ते गुरुवाञ्छासमन्विताः।
कन्यागते सवितरि पितरो यान्ति वै सुतान्॥
ततो वृश्चिकसम्प्राप्तौ निराशाः पितरो गताः।
पुनः स्वभवनं यान्ति शापं दत्वा सुदारुणम्॥ ------माधवीये।
பிச்சை எடுத்து வாழ்பவர்கூட ஒரு பிடி அன்னமாவது பித்ருக்களை நாடி அளிக்க வேண்டும் என்கின்றனர் மஹரிஷிகள். மஹாபரணி வ்யதீபாதம், மத்யமாஷ்டமி, த்ரயோதசி இந்த நாட்களிலாவது சிராத்தம் செய்தால் கயா சிராத்த பலன் உண்டாகும். லௌகிக முறையில் சிறிது வாசா உபகாரம் செய்தவருக்குக்கூட வந்தனச் சொல் வழங்குவது நாகரிகமென்று கருதுகிறோம். பெற்றெடுத்து வளர்த்து நம்மை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் உணவுக்கு நம்மை நாடி வரும்பொழுது பதினாறு நாட்களிலும் எள்ளும் நீருமேனும் தராவிடில் அது த்ரோஹமல்லவா? பெற்றோர் திதியிலேனும் மஹாளயம் செய்வது அவர் பொருளுக்கு உரிமை பாராட்டுவோர் கடமையாகும்.
“பக்ஷ மஹாளயம் செய். சக்தி இல்லாவிடில் பஞ்சமியிலிருந்து தர்சம் வரையில், அல்லது அஷ்டமியிலிருந்து தர்சம் வரையில் அல்லது தசமி முதல் தர்சம் வரையிலாவது மஹாளயம் செய்” என்று தர்ம நூல் சக்தியில்லாதவருக்குச் சலுகை காட்டுகிறது. விதிப்படி அன்ன சிராத்தம் செய்க. அதற்குச் சக்தியில்லாதவர் ஹிரண்ய சிராத்தமேனும் செய்யட்டும். அதற்கும் பொருளில்லாதவர், ஸர்வஸுலபமான திலஜலமளித்துப் பித்ருக்கள் அருளால் ஸம்பத்தைப் பெறலாம்.
16 நாள் ஆண்டுக்கு ஒரு முறை பித்ருபூஜை நடத்தினர் முன்னோர். மஹாளயம் செய்யாவிடில் பிரத்யவாயம்; செய்தால் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு வகையான பலன் உண்டு என்கிறார் ஆபஸ்தம்பர். முக்கியமாக பித்ருசாபத்தால்தான் புத்திரபாக்கியம் இல்லாமற் போகிறது.
पुत्रानयुस्तथारोग्यं ऐश्वर्यमतुलं तथा।
प्राप्नोति पञ्चमे दत्तश्राद्धं कामांस्तथापरान्॥
பஞ்சமே என்பது ஆஷாட்யாதி பஞ்சமாபரபக்ஷம் என்பதாம். இது ஜாபாலியின் உபதேசம். துரீயாச்ரமிகளுக்குத் துவாதசியிலும், அஸ்த்ர சஸ்திரங்களால் இறந்தோருக்குச் சதுர்த்தசியிலும் செய்ய வேண்டும். பக்ஷ மஹாளயம் செய்வோர் அமாவாஸ்யையில் இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும். பித்ருக்களை நாடி ஒரே நாளில் இரண்டு சிராத்தம் செய்யக்கூடாது. ஆயினும் தர்சத்தில் பித்ரு மாதாமஹ வர்க்கம் இரண்டுக்கே தர்ப்பணம். மஹாளலயத்திலோ காருண்ய பித்ருக்களுக்கும் தர்ப்பணாதிகள் உண்டு.
காருண்ய பித்ருக்கள் யார்?
சிறிய தந்தை, பெரிய தந்தை, தமையன், தம்பி, தன் புத்திரர்கள், அத்தை, அம்மான், பெரிய தாயார், சிறிய தாயார், சகோதரிகள் அவர்களது புத்திரர்கள், மனைவி, மாமனார், மாமியார், நாட்டுப்பெண், மைத்துனன், குரு, யஜமானன், நண்பர்கள் ஆகியவர்களுக்கு மஹாளயத்தில் தர்ப்பணாதிகள் செய்ய வேண்டும்.
நமது ஆயுளில் ஒரு முறையாவது மஹாளய அன்னச்ராத்தம் செய்ய வேண்டாமா?

****************************************************************************************************************************************

நவராத்திரி பூஜை

द्वावृतू यमदंष्ट्राख्यौ नूनं सर्वजनेषु वै।
शरद्वसन्तनामानौ दुर्गमौ प्राणिनामिह॥
तस्माद्यत्नादिदं कार्यं सर्वत्र शुभमिच्छुना॥
-தேவீ பாகவதம், 3-ஆம் ஸ்கந்தம், 26-ஆம் அத்தியாயம்.
சூர்யபுத்திரரான யமன், தர்மராஜர் என்று காரணப் பெயர் பெற்றார்; தர்மம் தவற மாட்டார்; தம் சிற்றன்னையான சாயாதேவி செய்த அதர்மத்தைக் கண்டித்தவர். ஸுக்ருதிகளுக்குச் சாந்தரூபி; பாவிகளுக்கே க்ரூரமானவர். அவருடைய கோரப் பற்களாம் வஸந்தருதுவும் சரத்ருதுவும். யமபடர்களைத் தவிர வியாதிகள் எல்லாம் கிங்கர ரூபத்துடன் அவரைச் சேவிக்கின்றன. அவர் பெயரோ பயங்கரம். அவர் அதைவிடப் பயங்கரர். அவருடைய கோரப் பற்களைக் கண்டால் பயமுண்டாகும் என்று கூறவேண்டுமா? இந்த இரண்டு ருதுக்களிலும் பிராணிகள் நோய்வாய்ப்பட்டுத் துன்பப்படுகின்றனர். கஷ்டம் ஆபத்து வந்தபோது இயற்கையாக அனைவரும் “அம்மா” என்பர். அன்னை நம் உடலைத் தந்தவள் மாத்திரமல்ல.
உலகெலாம் பெற்றெடுத்த தாய். ’அம்பிகா’ என்றே வேதம் கூறுகிறது தேவியை. சந்திரவடிவம் அவள். அவள் இல்லையேல் எல்லோரும் சவமேயாவர். சக்தி இல்லை என்று கூறுகிறார்களே தவிர, சிவம் இல்லை, விஷ்ணு இல்லை என்று எவரும் கூறுவதில்லை. அவள் நமது ஹ்ருதய கமலத்தில் வசிக்கிறாள். அவள் உலகுக்கெல்லாம் இருப்பிடம். ஸ்தூலக் கண்ணுக்குப் புலப்படாதவள். ’காணாததைக் கேநத்தில் தேடு’ என்று ஒரு பழமொழி உண்டு.
தான் என்றும் தன்னாலேயேதான் ஸகல காரியங்களும் நடக்கின்றன என்றும் கர்வம் இந்திராதி வரையும் எவரையும் விடவில்லை. அவர்க்ளது மயக்கத்தைக் தெளிய வைத்தவள் தேவி உமா ஹைமவதி.
அசுரர்களை ஜயித்து ஸுரர்களுக்கு நன்மை புரியத் திருமாலை ஆளாக்கினாள். அவராலும் வெல்ல முடியாத மஹிஷாஸுரன், பண்டாஸுரன் முதலியவர் படுத்தும் பாடு சகிக்க முடியாதவராய், மூவருடன் தேவர்கள் அன்னையையே அண்டி வேண்டினர். சந்திரகலை கொளுத்துமா? தயாமூர்த்தியாம் அம்பிகை, க்ரூரமான யுத்தத்தை விரும்பவில்லை. ஆபத்து மேலிட்டது. பதவி அகன்றது. அடிமையாகி அசுரரை ஆராதித்தனர். துன்பம் வளர்ந்தது.
आपदि किं करणीयं ?स्मरणीयं चरणयुगलमम्बायाः।
तत्स्मरणं किं कुरुते? ब्रह्मादीनपि किंकरीकुरुते॥
ஆபத்தில் என்ன செய்யவேண்டும்? அன்னை திருவடிகளை நினைக்க வேண்டும். அந்த ஸ்மரணம் என்ன செய்துவிடும்? (துன்பத்தை அநுபவிக்கும்படி நம் தலையில் எழுதிய) பிரம்மாவைக்கூட நமக்குக் கிங்கரனாக்கும். அந்த அந்த அவசரத்துக்கேற்க அன்னை பல ரூபங்களை எடுத்தாள்; பல பெயர்களைப் பெற்றாள்; பல துஷ்டர்களை மாய்த்தாள்.
घोरान्या शिवान्या तनूः।
சண்டி, சாமுண்டி, மஹிஷாஸுரமர்த்தினி முதலிய உக்கிரமான உடலையும் பெற்றாள். பாலா, லலிதா, ராஜேஷ்வரி, த்ரிபுரஸுந்தரி போன்ற சாந்தமும் அழகும் வாய்ந்த பல ரூபமெடுத்தாள்.
நவராத்திரி:
பல்லாண்டு தவம் புரிந்து, தேவர்களது கருணையைப் பெறவேண்டும். மக்கள் சொற்களைக் கேட்டு கேட்டு மகிழும் மாதா அவள். தேவக்குழந்தைகள் தம் உடலை வாட்டிக் கடுந்தவம் புரிய அதைக் கண்டு மனமிரங்கி, எட்டாம் நள்ளிரவில் அவதரித்தாள். நவமியன்று தூதுனுப்பி போரில்லாமல் ஸமாதானம் காண முயன்றாள். இது உள்ளுக்கு ஔஷதமளித்துச் சிகித்ஸை செய்யும் வகை. அது பயன் தராவிடில் சஸ்த்ர சிகித்ஸைதானே?
ஆஹா! என்னே கருணை! மஹிஷாஸுரனை நோக்கி, “உன் புத்தியும் மஹிஷ புத்தியாக இருக்கின்றதே!” என்று எச்சரித்த மாதா, அவன் சிரத்தை அறுத்து அவன் தலையில் யோகிகளது ஹ்ருதய கமலத்திலுள்ள தன் அரிய பத கமலத்தை வைத்தாள். ஆலயம் அதைக் காண்பிக்கும்.
अज्ञान्तध्वान्तदीपिका அஞ்ஞான இருளை (இருள் நிறம். தாமஸ குணம். தானும் கெட்டுப் பிறரையும் சேற்று நீரால் ப்ரோக்ஷிக்கும் எருமைக் குணம்) நீக்கி, மெஞ்ஞான ஒளியைத் தந்தாள் தேவி. வேறு கதி ஏது நமக்கு?
தேவர் அசைவற்றுத் தவக்கோலம் கொண்டபோது சராசரமான ஸமஸ்த வஸ்துக்களும் அசைவற்று நின்ற ஐதிஹ்யமே கொலு வடிவமாகக் காட்டுப்படுகிறது போலும்! தேவி இச்சா சக்தி, க்ரிய சக்தி, ஞான சக்தி ஸ்வரூபிணி. பிரம்மதேவி, மஹாலக்ஷ்மி, ஞானதேவி ஸரஸ்வதி என்று முறையில் தேவியை வழிபடுகிறோம். ’ चेलाजिनकुशोत्त्तरम् I வஸ்த்ரம், அஜினம், தர்ப்பம் இவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அமைத்து ஜபம் செய்’ என்றபோது பாட க்ரமத்தை மாற்றி, தர்ப்பம், அஜினம், வஸ்த்ரம் இவற்றை ஆசனமாக அமர்த்துவதுபோல் நமது பாவமென்னும் சத்துருவைக் கொல்லத் துர்க்கையையும், பொருளைத் தர லக்ஷ்மியையும், மெய்ஞ்ஞானம் பெற ஸரஸ்வதியையும் ஆராதிக்கிறோம். அன்னை வெற்றியளித்த நாளே விஜயதசமி. வெறும் ஜயமல்ல; விசேஷ ஜயம். பொதுவாக நற்காரியங்களுக்கு விலக்கப்பட்ட சனியோ செவ்வாய்க்கிழமையோ ஆயினும், அன்று கல்வி கற்கவோ வேறு எந்தக் காரியம் செய்யவோ மிகச் சிறந்த நாளாகும். நவராத்திரியில் கலைகளுக்கும் அவகாசம் உண்டு. இதை முன்னோர் கல்வி பக்ஷமாகக் கொண்டாடினர்.
பக்தர் நலம் பெற, ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் நடைபெறும் வேத வித்தியாஹோமம், பாராயணம், அர்ச்சனை, ஸுவாஸினி பூஜை, கன்னியா பூஜை முதலியவற்றைக் காண்பதோ அதில் பங்கெடுத்துக்கொள்வதோ பெரும் புண்ணியம் உள்ளவர்க்கே கிடைக்கும்.
மஹாளயம், நவராத்திரி பூஜை இவைபற்றிக் கல்பத்துடன் நாம் எழுதிய நூல்களில் விரிவைக் காணலாம்.

           
தினம்      வயசு      கன்னிகை                   பெயர்                         பயன்                      
1            2                 1                      குமாரிகா                     சத்ருநாசம்      
2            3                 2                      த்ரிமூர்த்தி                   தர்மார்த்தஸித்தி
3            4                 3                      கல்யாணி                    வித்யாஜயம்
4            5                 4                      ரோஹிணீ                   ரோகநிவிருத்தி
5            6                5                       காளிகா                       பயநாசம்
6            7                 6                      சண்டிகா                      சம்பத்விருத்தி
7            8                 7                      சாம்பவீ                       ராஜவச்யம்
8            9                 8                      துர்கா                          துக்கநாசம்
9           10                9                      ஸுபத்ரா                     சிந்திதபலப்ராப்தி     

 
நோயற்ற லக்ஷணமான கன்னிகைகளுக்கு வஸ்திரம், ஸௌபாக்கியத் திரவ்யம், தக்ஷிணை முதலியவற்றைக் கொடுத்து விதிப்படி பூஜித்து, போஜனமும் செய்விக்க வேண்டும்.

Home Page