ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்


நமது லக்ஷ்யம்

“காமகோடி ப்ரதீபம்” என்கிற மங்களகரமான பெயருடன் இப்பத்திரிகையை வெளியிட வேண்டுமென்கிற பேரவா பல ஆஸ்திகர்களுக்கு வெகு நாட்களாக ஏற்பட்டிருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்காக இவ் வருஷம் தை மாதத்தில் மாதிரி சஞ்சிகையாக இது வெளியிடப்படுகிறது. பராசக்தியின் பல பீடங்களுக்குள் நாபீஸ்தலமாகிய காஞ்சியில் அமைந்த ஸ்ரீ காமகோடிஸ்தானம் தொன்றுதொட்டு புகழ்பெற்று வந்திருக்கிறது என்பது பாரததேசத்து மக்களுக்கு நன்கு தெரிந்ததே. காசி எப்படியோ அப்படியே தென்தேசத்துக்கே திலகமாக காஞ்சீ என்ற திவ்யக்ஷேத்திரம் ஆயிரக்கணக்கான ஆன்டுகளாக பிரசித்தியடைந்திருக்கிறது. இந்த உண்மை சரித்திர வாயிலாகவும் பரம்பரையாகவும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே. நமது சமயங்களுக்கெல்லாம் முக்கிய ஸ்தானமாக காஞ்சீ நகரம் பிரகாசிக்கிறது. சைவர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும், பெளத்த ஜைனர்களுக்குங்கூட பிரசாரத்துக்கு முக்கிய இடமாக இருந்துவருகிறது.
நமது ஹிந்து மதத்தை நிலைநாட்டி, வைதிக தர்மத்தை நன்கு ப்ரதிஷ்டை செய்த ஜகத்குரு ஸ்ரீ பகவத்பாத ஸ்ரீ சங்கராச்சார்யரவர்கள், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த க்ஷேத்திரங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று தன்னுடைய திக்விஜயத்தை செய்தார் என்பது எல்லோரும் ஒப்புக்கொண்டதே. அவ்விதம் திக்விஜயம் செய்த ஸ்ரீ பகவத்பாதர்கள் என்றும் வைதிக தர்மம் நிலைத்திருக்க அங்கங்கே ஒரே காலத்தில் பல ஸ்தாபனங்கள் நிருவும்படி ஏற்பட்டது என்பதும் நாம் அங்கீகரிக்க வேண்டியதே. “பஞ்சபாதிகா” என்னும் உயர்ந்த நூலில் ஸ்ரீ பகவத்பாதர்களின் சிஷ்யரான ஸ்ரீ பத்மபாதாச்சார்யரின் ஆரம்ப குருவந்தன ச்லோகத்தில், (பிரத்யாசமுன்முகவிநீத விநேய பிருங்கா:) என்று சொல்லி மகிழ்கிறார்கள். இந்தியாவின் பல இடங்களில் ஸ்ரீ பகவத்பாதர்களின் சிஷ்யர்கள் அவர்காலத்திலேயே விளங்கினார்கள் என்று இதனால் நன்கு புலப்படுகிறது. அவருடைய திக்விஜய யாத்திரையிலேயே காஞ்சியில் அவர் வெகுகாலம் வசித்தார் என்றும் பல காரணங்களால் தெரிகிறது. “ஸெளந்தர்ய ஸஹரி”. “தேவி புஜங்கம்” முதலான உயர்ந்த தேவீ ஸ்தோத்திர ரத்னங்களை உலகத்திற்கு தந்த ஸ்ரீ பகவத்பாதர்கள் பராசக்தியின் முக்கிய பீடமாய் அமைந்த காஞ்சியில் ஈடுபட்டு வசித்தார்கள் என்று சொல்வது மிகையாகாது. ஸ்ரீ காமகோடி ஆலயம் அவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டது என்றும், அவருடைய விக்ரஹ அமைப்பு அந்த ஆலயத்தில் இருக்கிறது என்றும் ஆஸ்திகர்கள் அனைவரும் பார்த்துக் களித்ததே. காஞ்சீ மண்டலத்தில் இன்னும் பல இடங்களில் அவருடைய உருவம் சிலையில் செதுக்கப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்கது.
பாரத தேசத்திலுள்ள ஆஸ்திகர்கள் அனைவரும் செய்த புண்யத்தின் பயனாய் ஸ்ரீ காமகோடி ஸ்தானமாகிய அந்த திவ்ய க்ஷேத்திரத்தில் ஸ்ரீ பகவத்பாதர்களால் ஸ்ரீ காமகோடி பீடம் என்ற பீடம் ஸ்தாபிக்கப்பட்டு நாளது வரையில் சிஷ்ய பரம்பரையில் வந்த ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகளால் பிரகாசித்து வருகிறது. பல்வேறு சமயங்கள் தோன்றி, நாடெங்கும் பல கக்ஷிகளாகப் பரவி, மனிதர்களுடைய மனம் கலங்கி, நற்கதிக்கு எதைத் தழுவினால் நல்லது என்று புரியாமல் தவிக்கும் காலத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாய் ஸ்ரீ பகவத்பாதர்கள் தோன்றி ஸநாதன தர்மத்தை நிலைநாட்டினதால் அந்த தர்மம் இன்றும் சீர்குலையாமல் இருக்கப்பெற்றது என்கிற உன்மையை நம் பாரதத்தைச் சேர்ந்த எந்த வகுப்பினரும் மறுக்க முடியாது. இக் காலத்திலுங்கூட பல வேறுபாடுகளாலும் கிளர்ச்சிகளாலும், நாஸ்திகத்தின் தலையெடுப்பினாலும் ஸநாதன தர்மத்துக்கு அபாயம் ஏற்படுமோ என்று ஆஸ்திகர்கள் அஞ்சும் சமயத்தில் 1907-ஆம் ஆண்டில், ஆதிசங்கரர் அவர்களே மறுபடியும் அவதரித்தார்கள் என்று கருதும்படியாக பகவத் கீதையில் கண்ட ஸ்திதப்ரக்ஞலக்ஷணங்கள் பூர்ணமாய்பொருந்திய ஸ்ரீ சந்திரசேகரந்த்ரஸரஸ்வதீ பூஜ்யபாதாள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக உதித்தார். நம் நாட்டில் இதை உணர்ந்து மகிழ்ந்து இன்புறாதவர்கள் இல்லை. மேல் நாட்டு நாகரிகத்தாலும் ஆங்கிலப்படிப்பினாலும் ஆஸ்திகர்களின் மனோநிலை கலங்கி துன்பப்படும் காலத்தில் தன்னுடைய தவமஹிமையாலும் உபதேசங்களாலும், தன்னுடைய ஹிருதயங்கமமான மொழிகளாலும் ஊக்கமளிக்கும் திறமையாலும் கார்ய நிர்வாஹ சக்தியாலும் இந் நாளில் எழும் பல பிரச்சனைகளின் உட்கருத்துக்களை அறிந்து அவைகளுக்குத் தகுந்த பரிஹாரம் தேடி விளக்கம் கூறும் ஆற்றல், விவேகம் இவைகளாலும் ஸநாதன தர்மத்தை அவர்கள் நாடு முழுவதும் பரவச் செய்வது ஸ்ரீ பகவத்பாதர்களவர்கள் செய்த திக்விஜயத்துக்கு ஒப்பதே என்பதில் ஜயமில்லை. ஆஸ்திகர்கள் அனைவரும் தங்களுடைய நன்றியை எவ்விதத்திலும் தெரிவிக்க வேண்டும் என்ற ஆவலினால்தான் அவர்களுக்கு ஷஷ்டியப்தபூர்த்தி மஹோத்ஸவம், ஸ்வர்ணோத்ஸ்வம், ஹேமாபிஷேகம் முதலிய கைங்கர்யங்களில் ஈடுபட திரள் திரளாக முன்வந்தனர். இந்தக் கைங்கர்யங்களில் எல்லா வகுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ரஸரஸ்வதீ பூஜ்யபாதாள் அவர்களுடைய உபதேசங்களை அவ்வப்போது வெளிப்படுத்தவும், அவர்கள் ஈடுபடுகிற நற்காரியங்களை விவரித்து மக்களுக்கு உணர்த்தவும், இப்பீடத்தின் மஹிமையையும், இதை அலங்கரித்த பூர்வாச்சார்யார்களின் வரலாறுகளையும் அனைவரும் அறியும்படி செய்யவும், ஸநாதன தர்மதத்வங்களை பிரகாசப்படுத்தவும், அந்த தர்மத்தை விளக்கும் அரிய நூல்களை வெளியிடவும் பத்திரிகையொன்று நிறுவுவது ஸநாதன தர்மத்திற்கு நாம் செய்யும் தொண்டு என்பதில் ஜயமில்லை. ஸ்ரீ காமாக்ஷியின் உபாஸனையை நாடெங்கும் பரவச் செய்யவும் இப்பத்திரிகை ஒரு கருவியாக அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொண்டைமண்டலம் முழுவதும் ஸ்வர்ணவிருஷ்டி செய்த அம்பிகையின் கருணையால் நாடு செழிக்கும் என்று பூர்ணமாக நம்புகிறோம். இப்பத்திரிகையைப் படித்தும், உதவி செய்தும் அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.

Home Page