Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்

 மலர் -21 ரௌத்ர வருஷம் - சித்திரை, வைகாசி ஏப்ரல், மே - 1980 இதழ் : 3, 4


முதலையுண்ட மதலை
(பி.கே.பாலசுப்ரமணியம்)

பாரத பூமியில் தோன்றிய மகான்கள் எண்ணிலடங்கார். அவர்களில் ஒருவர் தாம் வாடிய பயிருக்கு மழைபோல் வேதங்களுக்கு, வேத மதத்திற்குப் புத்துயிரூட்ட ஞான சூரியனாகத் தோன்றிய குழந்தை, ஆர்யாம்பாள் ஈன்றெடுத்த (ஆதி) சங்கரர்.

புத்த, சமண மதங்களைக் கண்டித்து ஸநாதன தர்மத்தை நிலைநாட்ட, ஆதி சிவனே தோன்றியது போன்று ஆதிசங்கரர் அவதரித்தார்.

இயற்கை எழிலும் வளமும் கொழிக்கும் கேரள நாட்டில் ஆல்வாய்க்கு அருகில் காலடி என்று அழகியதொரு கிராமம். அங்கே நம்பூதிரி குலத்தில் சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியின் குழந்தையில்லாக் குறையை நீக்க இறைவன் திருவருளால் தோன்றினார் வேதாந்தச் சுடரான சங்கரர்.

ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன்னர் நந்தன வருஷம் வைகாசி சுக்ல பஞ்சமி திருவாதிரை நக்ஷத்திரத்தில் உலகமுய்ய பாரத ஜோதியாக தெய்வக் குழந்தை அவதரித்தது. பெற்றோர்களிட்ட பெயர் சங்கரன். சிறு வயதிலேயே உபநயனம் நடந்தது. குருகுலத்தில் தனது ஏழாவது வயதிலேயே வேத சாஸ்திரங்களை முறையாகக் கற்றார். இதற்கிடையில் தந்தையாரும் சிவகதி அடைந்தார்.

ஞானமூர்த்தி சங்கரரின் வாக்கில்-சரஸ்வதி, நோக்கில்-கருணை, முகத்தில்-தேஜஸ், குணத்தில்-சாந்தம் ஆகியவை குடி கொண்டன.

அன்று துவாதசி, பிக்ஷைக்குச் சென்றார் ஞானக்கனியான சங்கரர். ஓர் ஏழைச் சுமங்கலி, சங்கரருக்குப் பிக்ஷை தர ஏதுமில்லால் மன வருத்தமுற்றாள்.  ஆயினும் தன் வீட்டிலிருந்த ஓர் நெல்லிக்கனியை எடுத்துவந்து சங்கரருக்குப் பிக்ஷையிட்டாள். அவளது அவல நிலையை உணர்ந்த கருணைக்கடலான சங்கரரின் மனம் மிக்க வேதனையுற்றது. ஏழை மாதரின் இல்லத்தில் பொன் கொழிக்கச் செய்ய எண்ணி கணீரென்ற இனிய குரலில், "அங்கம் ஹரே புலக பூஷணமாச்ரயந்தி" என திருமகளை நினைத்து (கனகதாரா) ஸ்தோத்ரம் செய்தார். அவருடைய வாக்கு வன்மையால் அங்கே செல்வம் நிரம்பி வளம் பெருகிற்று எனச் சொல்லவும் வேண்டுமோ!

சங்கரர் வழக்கம்போல் தன் தாயுடன் சென்று நதியில் குளித்துக்கொண்டிருந்தார். துர்வாச முனிவரின் சாபத்தைப் பெற்ற (கந்தர்வன்) முதலை, நதியில் நீராடிக்கொண்டிருந்த சங்கரரின் காலைக் கவ்விற்று. தனது அருமை மகன் சங்கரன் எவ்வாறேனும் பிழைத்தால் போதுமெனக் கருதிய தாய் சங்கரரின் வேண்டுகோளுக்கிணங்கிச் சந்நியாசம் வாங்கிக்கொள்ள அநுமதி தந்தாள். மறுகணமே முதலை காலை விட்டது. சங்கரரும் உலகப் பற்றை விட்டார்.

சந்நியாசியான சங்கரர் தக்க குருவைத் தேடி நர்மதை நதிக்கரையிலுள்ள கோவிந்த பகவத் பாதரின் ஆச்ரமத்தை அடைந்தார். கௌடபாதர் என்ற மகானின் சீடரே கோவிந்த பாதர். சங்கரரை சீடனாக ஏற்றுக்கொண்டு முறையான சந்நியாசம் அளித்தார் குரு கோவிந்தபாதர். சங்கரர், சங்கர பகவத்பாதாசாரியர் ஆனார்.

சங்கர பகவத்பாதர் காசி நகர் சென்று, காசினிப் புலவோர் புகழும் பல நூல்களை இயற்றியருளினார். "ப்ரஸ்தான த்ர்யம்" எனப்படும் வியாசர் அருளிய பிரம்ம சூத்திரம், கீதை, உபநிஷத்துக்களுக்கு ஆசாரிய ஸ்வாமிகள் விளக்க உரை (பாஷ்யம்) செய்தருளினார்.

அவர் இயற்றிய நூல்களுள் சிலவற்றை ஈண்டு காண்போம். முடிந்தவரை படித்துப் பயனும் பெறுவோம். எளிமையான சொற்கட்டு; அருமையான ஆழங் காணவியலா அற்புதக் கருத்துக் கோவை அவை.

ஸாதன பஞ்சகம், மனீஷா பஞ்சகம், கணேச பஞ்சரத்னம்,
தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம், கோவிந்த அஷ்டகம், தச ச்லோகி,
சிவனந்த லஹரி, ஆனந்த லஹரி, ஸௌந்தர்ய லஹரி,
ப்ரச்னோத்தர ரத்னமாலா, உபதேச ஸாஹஸ்ரி, பஜகோவிந்தம்
இப்படிப் பலப்பல.

தம் காலத்திற்கு முன்பிருந்த பைரவ, பாசுபத, தந்த்ர, காபாலிக, பாஞ்சராத்ர, பௌத்த, ஜைனமதங்கள் போன்ற எண்ணற்ற கருத்து வேறுபாடுகளைக் கொண்டவைகளைக்போக்கி அத்வைதத்தை நிரூபித்து சைவம், சாக்தம் ஸௌரம், வைஷ்ணவம், கௌமாரம், காணபத்யம் ஆகிய ஆறு மதங்களை ஸ்தாபித்து "ஷண்மத ஸ்தாபகாசார்யர்" என்ற விருதினைப் பெற்றார்.

பாரத புண்ணிய பூமியில் ஆதி சங்கரரின் காலடி படாத இடங்களே இல்லை எனலாம். அத்வைத மடங்களை ஆங்காங்கே நிறுவி நாடெங்கும் வேதாந்தக்கொடி நாட்டிய ஞானச்சுடர்மணியாகப் பிரகாசித்தார்.

ஆதி சங்கரரைப்பற்றி மஹா கவி பாரதியார் கூறும் வாக்கியங்களைக் கவனியுங்கள்.

இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்.........
......முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்.........
.........என்னகூறி மற்றெங்கன் உணர்த்துவேன்.

என ஏங்குகிறார் பாரதியார். பாரதியின் உள்ளத்தைத் தணிப்போம். சங்கரரின் ஏற்றத்தை இனியாகிலும் நம் இளஞ் சந்ததியேரிடையே பரப்புவோம். ஞானச் சுடறொளி "பிரச்னோத்தர ரத்னமாலை"யில் கூறியது போன்று குரு வசனத்தைக் கருத்தில் கொண்டு தீயர்--பிறர் பொருள் நீக்கி, உண்மையறிஞனை, உண்மையறிவினை உணர்ந்து, ஸாதுக்களின் உபதேசம் பெற்று, ஜீவஹிதம் செய்து ஒழுக்கமுடையோனாக விளங்கிக் காலடியில் அவதரித்தவரின் காலடியில் பணிவோமாக!

ஸ்வாமி விவேகானந்தர் கூறுகிறார்: "சங்கரர் வேத தர்மத்தின் தொன்று தொட்டு வந்த பண்பை ஸ்தாபித்தவர். அவரைப் பலர் சிவனுடைய அவதாரமாய்க் கொள்கின்றனர். இந்த சங்கரரை நீங்கள் பின்பற்றி ஒழுக வேண்டும்."

சங்கரம் சங்கராசார்யம் கேசவம் பாதராயணம்
ஸூத்ர பாஷ்ய க்ருதௌ வந்தே பகவந்தௌ புன: புன:
ச்ருதி ஸ்ம்ருதி புராணானாமாலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்.

Home Page