ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு பரமாசார்யர்கள்
(ஓர் பக்தர்)
(பல வருஷங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி)

பல வருஷங்களுக்குப் பிறகு எனக்கு ஆசார்யர்களின் தரிசன பாக்யம் ஏற்பட்டது. தஞ்சை கலைப் பொருட்காட்சியைக் காணச் சென்ற வழியிலே, கும்பகோணத்தில் இறங்கி, ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரித்தேன். அவர்கள் அதற்கு முதல் நாள்தான் கும்பகோணத்திலிருந்து பயணமாகி, மூன்று நான்கு மைல்களுக்கப்பாலுள்ள வேப்பத்தூரில் தங்கியிருப்பதாக அறிந்தேன். அங்கே சென்றேன்.

மாலை நான்கு மணி சுமார் இருக்கும். ’பெரியவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ? தரிசனம் இப்பொழுது சாத்யமோ?’ என்று மடத்து மானேஜரிடம் விசாரித்தேன்.

"யார் கொடுக்கிறார்கள் ஓய்வு? இரண்டு நிமிஷத்தில் பார்க்கப் போகிறீர்கள்!" என்று அவர் கூறினார்.
           

அதே மாதிரி, இரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு தரிசனம் செய்தேன். பல பேர்கள் பயபக்தியோடு நின்று கொண்டிருந்தார்கள்.

 

ஆசார்ய ஸ்வாமிகளுடைய அபார ஞாபக சக்தியையும், அவரது அமோகமான அன்பையும், அபார அறிவையும் குறித்துப் புகழாதார் இல்லை. இப்பொழுது அந்த ஜாபிதாவில் அடியேனையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

 

எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் ஆவலோடு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஆசார்ய ஸ்வாமிகளைத் தரிசிக்க வருகிறார்கள். அவர்களையெல்லாம் அவர் விசாரிக்கும் பாணியும், ஏற்கெனவே ஒருமுறை பார்த்தவர்களைச் சட்டெனத் தெரிந்து கொண்டு க்ஷேம லாபங்களைக் கேட்டறியும் முறையும், உள்ளத்திற்கு உவகையளிப்பதாகவே இருக்கின்றன. சற்று நேரங்கூட அவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. உற்சாகமாக ஓயாது பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நடு நடுவே அழகான உபமானங்களோடு உபதேச மொழிகளையும் அருள்பாலிக்கிறார்கள்.

ஆசார்ய ஸ்வாமிகளை நான் பார்த்து நான்கு வருஷங்களுக்கு மேலாகவே ஆகின்றன. ஆயினும் சட்டென அடையாளம் கண்டு கொண்டு க்ஷேமலாபங்களை விசாரித்தார்கள்.

பெரியவர்கள் அங்குரார்ப்பணம் செய்த திருப்பாவை-திருவெம்பாவை இயக்கம் இப்பொழுது ஆல விருக்ஷம் போல் செழித்துப் பரந்தும் வியாபகமாகி வருவதைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

பிறகு, ஒரு போட்டோ பிடித்தால் தேவலை என்று விஞ்ஞாபனம் செய்து கொண்டேன். ’வாசலில் போயிரு’ என்று அவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து, போட்டோவிற்கு நின்று விட்டு, அடுத்த வீட்டில் போயமர்ந்து கொண்டு, சொல்லியனுப்பினார்கள்.

 

ஏகாந்தமாக இருந்து பேசலாமென்று மனப்பால் குடித்துச் சென்றேன். ஐந்து நிமிஷங்கள் பேசியிருப்போம். அதற்குள் ஐந்தாறு கார்களில் அந்தக் கிராமத்தைத் தேடி வந்து குவிந்தார்கள் பலர். எங்களுடைய சம்பாஷணையின் போக்கே வேறு தினுஸாகி விட்டது.

நர்மதை நதியை வலம் வருவதற்கு ஒரு ராணி ஏற்பாடு செய்திருப்பதாகவும், ஒரு ’காவி’ற்கு, அதாவது ஒரு காதத்திற்கு ஒரு சத்திரம் வீதம் கட்டியிருப்பதாகவும், பல கோவில்கள் அங்கே இருப்பதாகவும், அவற்றையெல்லாம் விவரிக்கும் நூல் ஒன்றை ஒருவர் ஹிந்தியில் எழுதியிருப்பதாகவும், அம்மாதிரி காவேரியைப் பற்றியும் தமிழில் எழுத வேண்டுமென்பது தமது விருப்பம் எனவும், அது சம்பந்தமாக, தாம் பல தகவல்கள் சேகரித்து வைத்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

பிறகு முக்யமானதொரு பிரச்னையை அவர்களிடம் எடுத்துக் கூறி, அதைத் தீர்க்க ஒரு வழி காட்டவேணுமாய் விண்ணப்பித்துக்கொண்டேன். ’இப்பொழுது ஸ்மார்த்த பிராம்மணர்களிடை வடமாள், பிருஹசரணம், வாத்திமாள், அஷ்டஸஹஸ்ரம் என்றெல்லாம் பல பிரிவுகளிருக்கின்றன. ஒரு பிரிவில் உள்ளவர்கள், மற்றொன்றிலிருப்பவர்களுடன் சம்பந்தம் செய்து கொள்வத்தில்லையே! ஒரு பிரிவில் ஒரு அந்தஸ்தில் உள்ளவர், சம்பந்தத்திற்கு அதே அந்தஸ்துள்ளவர் தம் பிரிவில் இருக்கிறாரா என்று பார்க்கிறார். அப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்காவிட்டால், ரொம்ப சிரமப்படுகிறார். ஆகவே, மேற்கண்ட பிரிவுப் பாகுபாடுகள் இல்லாவிட்டால், எத்தனையோ பேர்களுக்கு சௌகரியமாயிற்றே! சாரதா சட்டம், பண வசதியில்லாத பலருக்கு, தம் பெண்களைச் சிறிது அதிககாலம் கன்னியராகவே வைத்திருக்க வசதி செய்து தருகிற மாதிரி, மதத் தலைவர் மேற்கண்ட சங்கடத்தைத் தீர்க்க ஒரு பொது அநுமதியோ, சம்மதமோ அளிக்கலாமே!’ என்று கூறினேன்.

உடனே அசார்ய ஸ்வாமிகள், மேற்கண்ட பிரிவுகள் ஏற்பட்டது எப்படி என்பதை, இரு கதைகள் சகிதம் எடுத்துக்கூறினார்கள். மாத்வர்களிடையேயும், தெலுங்கர்களிடையேயும், இதே மாதிரிப் பல பிரிவுகள் இருப்பதையும், ஹூப்ளி பக்கங்களிலே, மஹாராஷ்டிர-கன்னட எல்லைகளிலே இருக்கும் அந்தணர்களை விசாரித்ததில், மேற்கண்ட பிரிவுகள் ஏதும் அவர்களிடை இல்லை என்று அறிந்ததாகவும், அதே மாதிரியாகவே மஹாராஷ்டிர-ஆந்திரப் பிரதேசங்கள் சந்திக்கும் எல்லைப்புற வாசிகளிடையேயும் இந்தப் பாகுபாடு இல்லை என்று தெரிந்ததாகவும் குறிப்பட்டார்கள்.

ஸ்மார்த்தர்களிடையே ஒரு பிரிவில் உள்ளவர் மற்றொன்றில் உள்ளவருடன் சம்பந்தம் செய்யும் விஷயமாக, ச்ருங்கேரியில் ஒரு பெரிய சதஸில் நீண்ட விவாதம் நடந்ததாகாவும், அதன் முடிவில் மேற்கண்ட பரஸ்பர சம்பந்தம் அனுமதிக்கப்படலாம் என்று தீர்மானிக்கப் பட்டதாகவும் ஸ்வாமிகள் சொன்னார்கள்.

ஆனால் அம்மாதிரி செய்வது கூடாது என்று, தாம் சொல்லி வந்திருப்பதாகவும், இருந்தாலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டால் அதிலிருந்து மீள வழி காண வேண்டியது அவசியம் என்றும், ஆகவே சிருங்கேரி முடிவின்படி நடக்கலாம் என்றும் காஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் சொன்னார்கள்.

இப்படியே ஸ்வாரஸ்யமாக வெகு நேரம் சம்பாஷித்துக் கொண்டிருந்தோம். பிறகு சாயங்கால ஸ்நானம், ஜப தபம், பூஜை எல்லாம் நடந்து, இரவிலே ஓன்பது மணி முதல் பன்னிரண்டு மணி வரை பேசிக் கொண்டே இருந்தார்கள். இரவு பத்துமணி சுமாருக்குப் பல வண்டிகளில் வந்து இறங்கினார்கள் சில மிராசுதார்கள் குடும்பத்தினர். அப்பப்பா! ஸ்வாமிகளுக்கு ஓய்வு ஓழிவே இல்லைதான்!

காஞ்சிபுரத்திற்கு விஜயம் செய்து வெகு காலமாகி விட்டதை உத்தேசித்து, அந்த ஷேத்திரத்திற்குப் போவதென சங்கல்பித்துக் கொண்டு ஆசார்ய ஸ்வாமிகள் புறப்பட்டிருக்கிறார்கள். கால் நடையாகவே செல்லப் போகிறார்களாம். திருவிடைமருதூரில் மறுநாள் முத்ராதிகாரிகள் மகாநாடாம். அதற்கு அவர்கள் விஜயம் செய்வார்களாம்.

~~~~~~~

Home Page